Chennai Wonderla: சென்னை அருகே புதியதாக திறக்கப்பட்ட பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லாவில், முதல்நாளே ரோலர் கோஸ்டர் பாதி வழியிலேயே நின்றுபோனது.
சென்னை வொண்டர்லா:
சென்னை அடுத்த திருப்போரூரில் தையூர் பகுதியில் தமிழ்நாட்டின் முதல் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா, கடந்த டிசம்பர் 1ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. 611 கோடிக்கும் அதிகமான செலவில் 43 உலகத் தரம் வாய்ந்த சவாரிகள் அங்கு உருவாக்கப்பட்டுள்ளன. தினமும் 6,500 பார்வையாளர்களை மகிழ்விக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படது. அதன்படி, முதல்நாளாக நேற்ரு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். மகிழ்ச்சியான மற்றும் புதுமையான அனுபவத்தை எதிர்பார்த்து சென்ற மக்களுக்கு, வொண்டர்லா ஒரு மோசமான அனுபவத்தை வழங்கியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
முதல் நாளே மட்டையான வொண்டர்லா
இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் மற்றும் மோனோ ரயில் போன்ற வசதிகள் இடம்பெற்று இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது. டிட்வா புயலின் தாக்கத்தின் காரணமாக தொடர்ந்து பெய்து வரும்மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நேற்று வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றுள்ளனர். ஆனால், பல ரைட்கள் முறையாக செயல்படவே இல்லை என்பதே, டிக்கெட் வாங்கி உள்ளே சென்றவர்களின் மனக்குமுறலாக உள்ளது. இதனால், ஆரம்பத்த முதல்நாளே இப்படியா? என பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்கள் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
பாதியில் நின்ற ரோலர் கோஸ்டர்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நோலர் கோஸ்டர் பயணிகளுடன் புறப்பட்டு சென்றபோது, பாதிவழியிலேயே நின்றுள்ளது. இதேபோன்று ஆக்டோபஸ் கரங்கள் உள்ளிட்ட பல ரைட்களும் பொதுமக்களுடன் பாதி வழியில் அந்தரத்தில் நின்றுள்ளது. பல பணிகள் முழுமையாக முடிக்கப்படலாமலேயே அவசரகதியில் திறக்கப்பட்டு உள்ளதாகவும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு உரிய பதிலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அதிருஷ்டவசமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ஒருவேளை அத்தகைய அசம்பாவிதம் ஏற்பட்டு இருந்தால், யார் பொறுப்பேற்பது என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.