தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவி மற்றும் திமுக மூத்த தலைவர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரையின் திருமணம் வரும் நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதையொட்டி, திருமணத்திற்கான அழைப்பிதழை மூத்த அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு கண்ணன் ரவி நேரில் வழங்கி வருகிறார்.
யார் இந்த கண்ணன் ரவி ?
கண்ணன் ரவி தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானவர். Kannan Ravi Group தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், கயல் ஆனந்தி உள்ளிட்டோர் நடித்த ‘இராவண கோட்டம்’ திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் திரையுலகில் கவனம் பெற்றார். தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தையும் தயாரித்தார். 2026ஆம் ஆண்டு வெளியான ‘TN 2026’, ‘Bang Bang’ உள்ளிட்ட படங்களிலும் தயாரிப்பாளராக இணைந்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தையும் KRG Productions சார்பில் தயாரிக்கிறார்; இதில் அவரது மகன் தீபக் ரவி இணை தயாரிப்பாளராக உள்ளார்.
திருமண விபரங்கள்
தீபக் ரவி - செந்தாமரை திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜூலை மாதம் வேலூர் காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அரசியல் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கண்ணன் ரவி தயாரிக்கும் திரைப்படங்களில் தீபக் ரவி இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், திருமணத்திற்கான அழைப்பிதழ் வழங்கும் பணிகளில் கண்ணன் ரவி ஈடுபட்டுள்ளார். நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுக்கும் அவர் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியுள்ளார். இந்த அழைப்பிதழ் வழக்கமான அச்சிடப்பட்ட பத்திரிகையாக இல்லாமல், மயில் தோகை விரிவது போன்ற வடிவமைப்புடன் கூடிய பிரத்யேகப் பெட்டியில் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் திருமண அழைப்பிதழுடன் பல்வேறு பரிசுப் பொருட்களும் இடம்பெற்றுள்ளன.
தீபக் ரவி - செந்தாமரை திருமண நிகழ்ச்சிகள் அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. அக்டோபர் 28ஆம் தேதி காலை ஹல்தி, மாலை மெஹந்தி, 29ஆம் தேதி மாலை சங்கீத் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அக்டோபர் 31ஆம் தேதி மாலை வரவேற்பு நிகழ்ச்சியும், நவம்பர் 1ஆம் தேதி காலை திருமண முகூர்த்தமும் நடைபெறுகிறது. ஹல்தி, மெஹந்தி, சங்கீத் நிகழ்ச்சிகள் மகாபலிபுரத்தில் உள்ள கள்டன் சமுத்ரா பேலஸிலும், வரவேற்பு மற்றும் திருமணம் நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷனிலும் நடைபெறுகின்றன.
திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் மற்றும் திரையுலகில் தனக்குள்ள நட்பு வட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார் கண்ணன் ரவி. இதனால் தீபக் ரவி - செந்தாமரை திருமணம் அரசியல் மற்றும் திரையுலகினர் பங்கேற்கும் முக்கிய குடும்ப நிகழ்வாக அமைய உள்ளது.
