தமிழ் திரையுலகில் பிரபல பின்னணிப் பாடகர்களில் ஒருவரான கிருஷ்ணராஜ். சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே வேம்படிதாளம் கிராமத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே இசை மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் 1989-ம் ஆண்டு, சமீபத்தில் மறைந்த இசையமைப்பாளர் தேவா இசையமைத்த ‘அதிகாலை சுபவேளை‘ என்ற திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து, சில படங்களில் பாடிய அவர், 1996-ம் ஆண்டு, காதல் கோட்டை திரைப்படத்தில் இடம்பெற்ற நலம் நலமறிய ஆவல், வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
பாடகர் கிருஷ்ணராஜ்
தொடர்ந்து, நீ பாத்துட்டு போனாலும், பொற்காலம் திரைப்படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூரு மண்ணு எடுத்து உள்ளிட்ட பல ஹிட் பாடல்களுடன், 300-க்கும் மேற்பட்ட திரைப் பாடல்களையும், ஆல்பம் பாடல்கள், பக்திப் பாடல்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை கிருஷ்ணராஜ் பாடியுள்ளார். தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடலுக்காக தமிழக அரசின் திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
மறைந்த சிங்கப்பூர் முன்னாள் குடியரசுத் தலைவர் செல்லப்பன் ராமநாதனுக்கு பிடித்தமான பாடலான இந்த பாடல், அவரது விருப்பத்தின்படி இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 74 வயதான கிருஷ்ணராஜ், சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
திரைத்துறையினர் இரங்கல்
இந்நிலையில் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயைமைப்பாளர் தேவாவின் இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்த கிருஷ்ணராஜ், 90-களில் மிகவும் பிரபலமாக இருந்தார். தேவா மறைந்த சில நாட்களிலேயே இவரும் மறைந்தது, ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
