காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி நடைபெறும் கங்கைகொண்டான் மண்டப மண்டகப்படியில் நாள்தோறும் பிரச்சனை செய்து வரும் இருபிரிவினர் பிரிவினர்.


வடகலை - தென்கலை    


108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில், வடகலை பிரிவினருக்கும், தென்கலை பிரிவினருக்கும் இடையே திவ்ய பிரபந்தம், வேத பாராயணம், ஸ்தோத்திர பாடல் பாடுவதில் ஆண்டாண்டு காலமாக பிரச்னை நிலவி வருகிறது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வடகலை, தென்கலை பிரிவினர்கள் கோஷ்டி பாடும் உரிமை குறித்த தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.




"கோஷ்டிகள் பாட கூடாது"


உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கோயில் திருவிழாவில் பூஜை முறைகளில் குறுக்கீடு செய்து தென்கலை, வடகலை என இரு பிரிவினரும் கோஷ்டிகள் பாட கூடாது என கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து, அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த நான்கு நாட்களாக காலை, மாலை என இரு வேலைகளிலும் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.




வீதி உலாவின் போது வரதராஜ பெருமாள் கங்கைகொண்டான் மண்டபத்தில் எழுந்தருளி மண்டகப்படி கண்டருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இந்நிலையில் கங்கைகொண்டான் மண்டபத்தில் கோயிலில் உரிமையுள்ள தாத்தாச்சாரி குடும்பத்தினர் மந்திர புஷ்பம் எனும் வேத மந்திரங்களை பாடி பூஜை செய்து வருகின்றனர். நாள்தோறும் தாத்தாச்சார்ய குடும்பத்தினர் வேத மந்திரங்களை பாடும் போது தென்கலை பிரிவினர் தாங்களும் வேத மந்திரங்களை பாடுவோம் என  கூறி பிரச்சனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.


நாள்தோறும்  வாக்குவாதம்


தென்கலை பிரிவினர் பாடக்கூடாது என கோயில் நிர்வாக ஊழியர்கள் கூறும் நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விசாரிக்க வரும் காவல்துறையினரிடமும், கோயில் வளாகத்தில் பாட மட்டுமே தடை விதித்திருப்பதாகவும், வெளி பகுதிகளில் பாட தடை இல்லை எனவும், அப்படி இருந்தால் நீதிமன்றத்தில் சென்று முறையிட்டுக் கொள்ளுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு கங்கைகொண்டான் மண்டப பகுதியில் நாள்தோறும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.




நாள்தோறும் நடைபெறும் இரு பிரிவினருக்கு இடையே வாக்குவாத பிரச்சினையால் சுவாமி தரிசனம் செய்ய ஆவலோடு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், நாள்தோறும் இரு வேளைகளிலும் நடைபெறும் வாக்குவாத பிரச்சனைகளை பார்த்து பக்தர்கள் முகம் சுளித்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. பக்தர்கள் குறித்து எவ்வித கவலையும் இல்லாமல் தென்கலை பிரிவினர் நாள்தோறும் கங்கைகொண்டான் மண்டபத்திற்கு வந்து வேத மந்திரம் பாடுவதாக கூறி வாக்குவாதத்தில், ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர் என்பது வேதனை புரிய விஷயமாக உள்ளது.


முகம் சுளிக்கும் பக்தர்கள் 


தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற  வடகலை மற்றும் தென்கலை  இரு பிரிவினருக்கு இடையே பலதரப்பு பிரச்சனைகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் நிம்மதியாக சாமியை தரிசிக்க வரும் பக்தர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். சில சமயங்களில் எல்லை மீறி தகாத வார்த்தைகளில் பேசி கொள்வதும்,  அவ்வப்பொழுது அரங்கேறுவதால் பொதுமக்களும் பக்தர்களும் அவதி அடைகின்றனர்.