காஞ்சிபுரம் வாலாஜாபாத் பாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்து வருவதால், வாலாஜாபாத் தரை பாலத்தில் செல்ல இலகு ரக வாகனங்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரத்தில் பருவமழை
காஞ்சிபுரத்தில் பருவமழை தொடங்கியதால் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றன. பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய ஆறுகளுக்கு ஜவ்வாது மலை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வாலாஜாபாத்தில் போக்குவரத்துக்கு தடை
பாலாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து, அவலூர் செல்லும் தரைப்பாலம் முற்றிலுமாக வாகன போக்குவரத்துக்கு இன்று காலை 9:30 மணி அளவில் தடை செய்யப்பட்டது. வாலாஜாபாத் பாலாற்றில் 10,000 கன அடி நீர் செல்வதால் வாலாஜாபாத்தில் இருந்து அவலூர் மற்றும் அங்கம்பாக்கம், கம்பராஜபுரம், தம்மனூர், இளையனர் வேலூர், காவாந்தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
30 கிலோமீட்டர் சுற்றி சென்ற பொதுமக்கள்
இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என அனைத்து விதமான வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மறுகரையில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, நடந்து சென்று பாலாறு பாலத்தை கடந்தனர். இந்த பாலம் தடைபட்டிருப்பதால், வாகனங்களில் இந்த பாலத்தை கடக்க வேண்டுமென்றால், 30 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கை என்ன ?
கடந்த 2021 ஆம் ஆண்டு பாலாற்றில் சென்ற வெள்ளத்தின் போது இந்த பாலம் சேதமடைந்தது. அப்போது இந்த பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வாலாஜாபாத் அவளூர் இடையிலான தரைப்பாலம் மட்டுமே அமைக்கப்பட்டது.
வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலம்
அப்போது உயர்மட்ட மேம்பாலம் அமைத்திருந்தால் இந்த பிரச்சனை இருந்திருக்காது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தொடங்கிய போக்குவரத்து
இந்தநிலையில் நீர் வரத்து குறைந்ததால், இதனைத் தொடர்ந்து மாலை 4 மணியிலிருந்து போக்குவரத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளித்தனர். இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் மட்டுமே பாலத்தில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து பாலாற்றில் செல்லும் தண்ணீரை நீர்வளத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். பாலாற்றில் படிப்படியாக, தண்ணீர் குறைந்த பிறகு கனரக வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.