Chengalpattu Lakes: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 85 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி உள்ளது.
வடகிழக்கு பருவமழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக வடகிழக்கு பருவமழை ஒட்டி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
வரப்பிரசாதமாக கிடைத்த பாலாற்று தண்ணீர்
இந்தநிலையில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பிலிருந்து காஞ்சிபுரம் பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆந்திரா மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஏரிகள் நிறைந்த மாவட்டம் காஞ்சிபுரம்
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஏரிகள் உள்ளன. இவற்றில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிகள் மிகப்பெரிய ஏரிகளாகவும், மாவட்டத்திற்கு மிக முக்கிய ஏரிகளாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரத்தில் கனமழை
கடந்த 48 மணி நேரத்திற்கு மேலாக காஞ்சிபுரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே ஆற்றில் வெள்ளப்பெருக்கு செல்லும் நிலையில், கனமழை காரணமாக ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 65 ஏரிகள் நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று வரை 20 ஏரிகள் இருந்த நிலையில் தற்போது 85 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி உள்ளது. ஏழைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேகமாக நிரம்பும் பெரிய ஏரிகள்
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பெரிய ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக இவற்றில் தாமல் மற்றும் உத்திரமேரூர் ஆகிய இரண்டு ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தென்னேரி, உத்திரமேரூர் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி, மணிமங்கலம் ஏரி, கொலைவாய் ஏரி, பி.வி.களத்தூர் ஏரி, சிறுதாவூர் ஏரி, மதுராந்தகம் ஏரி, மானாமதி ஏரி, உள்ளிட்ட ஏரிகள் 11 அடியில் இருந்து 22 அடி வரை உயரம் கொண்டவை, இதில் முழுவதும் நிரம்பினால் 10 டிஎம்சி நீரை தேக்கி வைக்க முடியும் தற்போது பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளதால் 5 டிஎம்சி தண்ணீர் வரை தற்போது கிடைத்திருக்கிறதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏரிகளின் நிலவரம் என்ன ?
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளின் நிலவரம்:
100% ஏரிகள் - 85
90 சதவீத ஏரிகள் - 123
75 சதவீத ஏரிகள் - 309
50 சதவீத ஏரிகள் - 295
25 சதவீத ஏரிகள் - 91 ஏரிகள் நிரம்பியுள்ளது. தொடர்ந்து இதனை கண்காணிக்க நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதுபோக ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து ஊராட்சி மற்றும் கோவில் குளங்களும் மழை காரணமாக நிரம்பி வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே, ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றனர்.