மூன்று டன் செங்கரும்பில் காளை மாடுகள், மாட்டு வண்டியை வடிவமைத்து காஞ்சிபுரத்தில் பொங்கல் கொண்டாடிய விவசாய குடும்பத்தினர். 

தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு வரலாற்றில் பொங்கல் பண்டிகைக்கு என்று தனி இடம் உண்டு. இயற்கை தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் மக்கள் தங்கள் நன்றியினை உரித்தாக்கும் விதமாகவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜாதி, மத பேதங்களை மறந்து சமத்துவம் வளர்க்கும் ஒரே பண்டிகை பொங்கல்தான் என்றால் அது மிகையில்லை.

அந்த வகையில் பொங்கல் விழா தமிழ்நாடு மட்டுமின்றி, உலக தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய விழாவாக இருந்து வருகிறது. தை மாதம் பிறப்பதை ஒவ்வொரு தமிழரும், மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். பாரம்பரிய முறையாக இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகை விழா

காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிப்பூர் குண்டு குளம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார்-  செல்வி தம்பதியினர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவினை கொண்டாடி வருகின்றனர்.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்குமார் குடும்பத்தினர் விவசாயத்தை போற்றும் வகையிலும், இளைய தலைமுறையினரியே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செங்கரும்பில்லான பிரம்மாண்ட பானை, ஜல்லிக்கட்டு காளை, பாரத பிரதமர் மோடியின் உருவம், பாரம்பரிய குடிசை குடில் என ஆண்டுதோறும் ஒவ்வொரு விதமான வடிவங்களை மூன்று டன் செங்கருப்பில் வடிவமைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

கரும்பில் மாட்டு வண்டி 

அந்த வகையில் இந்த ஆண்டு விவசாயத்தையும் விவசாய தொழில் இருந்து அழிந்து வரும் காளை மாடுகளையும் மாட்டு வண்டிகளையும் கௌரவித்து இளைய தலைமுறையினரிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஒரு வார காலமாக மூன்று டன் எடையுள்ள செங்கரும்பினால் மாட்டு வண்டியையும், 5 அடி உயரமுள்ள இரண்டு காலை மாடுகளையும் உருவாக்கி நிஜமான மாட்டு வண்டியில் பூட்டி வடிவமைத்து இன்று பொங்கல் பண்டிகையை தங்கள் குடும்பத்தினரோடு பாரம்பரிய முறைப்படி கொண்டாடி மகிழ்ந்தனர். 

செங்கரும்பிலான மாட்டு வண்டியையும் காளை மாடுகளையும் வைத்து விவசாய குடும்பத்தினர் வணங்குவதை அறிந்து  ஏராளமான அந்தப் பகுதிக்கு வந்து ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து சென்று வருகின்றனர். பொங்கல் பண்டிகையை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் விதமாக இவ்வாறு செய்வதாக செந்தில்குமார் நம்மிடம் தெரிவித்தார்.