பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜூலை 3 ஆம் தேதி புதன்கிழமை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் அறிவிப்பு.


பரந்தூர் பசுமை விமான நிலையம் ( parandur greenfield airport ) 


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.




தொடரும் போராட்டம்  ( parandur airport protest )


கிராம மக்களின் போராட்டம் 707 வது நாளை எட்டியுள்ளது. கிராம மக்களின்  போராட்டம் நடக்கும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம், விமான நிலைய திட்டத்துக்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இதுபோக கிராம சபைகளில் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது, பேரணி மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்திலும் ஏகாம்பரம் கிராம மக்கள் ஈடுபட்டனர் இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த, 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 3  துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், 29 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள உட்பட 324 பேர் பணி அமர்த்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


சிறப்பு கிராம சபை கூட்டம்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளை கணக்கிட்டு தேர்வு செய்வதற்காக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்  நடைபெறுகிறது. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் நிலையில் பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் சிறப்பு கிராம சபை கூட்டமானது நடைபெறவில்லை.




போராட்ட குழுவினர் - தொடர் உண்ணாவிரதம்


ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 58 கிராம ஊராட்சிகளில் 57ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் நிலையில், ஏகனாபுரத்தில் மட்டும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறாததை கண்டிக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசும்,மாவட்ட நிர்வாகமும் ஏகனாபுரம் கிராமத்தை மட்டும் புறக்கணிப்பு செய்வதை கண்டித்தும், பரந்தூர் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வரும் ஜூலை 3 ம்தேதி புதன் கிழமை முதல்  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினர் மட்டும் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளதாக  அறிவித்து உள்ளனர்.