பரந்தூர் பசுமை விமான நிலையம்
 
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம்  அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால், தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


 




 நிலம் எடுப்புக்கான மாவட்ட வருவாய் அலுவலர் 


பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கான நில எடுப்புக்கான, முதல்நிலை அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில்  நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். தனி மாவட்ட வருவாய் அலுவலர் , புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், பரந்தூர், காஞ்சிபுரம் என்ற எழுத்து முகவரியில் எழுத்து மூலமாக பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.




போராட்டத்தை அறிவித்த கிராம மக்கள்


இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெரிவித்து ஏகாம்பரம் கிராமத்திலிருந்து பொன்னேரி கரை பகுதியில் அமைந்துள்ள நில எடுப்பு அலுவலகம் வரை டிராக்டரில் பேரணியாக சென்று , அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தாலும், சில கிலோமீட்டர்கள் டிராக்டரில் சென்ற பிறகு கைது செய்யப்படுவீர்கள் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.



இந்தநிலையில் நேற்று காலை போராட்டம் துவங்குவதற்கு முன்பே  வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பொது மக்களையும், விவசாய டிராக்டரில்  போராட்டத்திற்கு செல்ல இருந்த கிராம மக்கள், விவசாயிகள், பெண்கள் என அனைவரையும் போலீசார் கைது செய்ய முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்

 


" நாங்கள் போராட்டத்தை துவங்குவதற்கு முன்பே எங்கள் கிராமங்களில் அத்துமீறி கைது செய்வது காவல்துறையின் அராஜகப் போக்கு " என காவல்துறையிடம் விவசாயிகள் மற்றும் பெண்கள் கண்ணீர் மல்க வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வலுக்கட்டாயமாக தரதரவென பெண்களையும் இழுத்துச் சென்று, பேருந்துகளிலும் காவல்துறை வாகனங்களிலும் ஏற்றி அவர்களை கைது செய்தனர்.



 

கைது செய்யப்பட்ட கிராம மக்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் , நேற்று மதியம் உணவு புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு மேல் கைது செய்யப்பட்டோர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு

 






இந்தநிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட முயன்ற 137 கிராம மக்கள் மீது சுங்குவார்சத்திரம் போலீசார் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியர் உத்தரவை மீறுதல், சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் மீது மூன்று முறை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.