பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் ( parandur airport )


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம்  அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால், தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.





தொடரும் நில எடுப்பு அறிவிப்புகள்



இந்நிலையில் விமான நிலையம் அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணியில் தமிழக தொழில் துறை ஈடுபட்டு அதற்கான அறிவிப்பினை நாளிதழ்களில் வெளியிட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகளில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் ஏப்ரல் நான்காம் தேதிக்குள் நில எடுப்பு அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



 

நிலம் எடுப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அறிந்து கிராம மக்கள் பெரும் அச்சமடைய தொடங்கி உள்ளனர். நிலம் எடுப்பது தொடர்பான கோரிக்கை மற்றும் ஆட்சபனைகள் இருந்தால் 30 நாட்களுக்குள் தனி மாவட்ட அலுவலர், புதிய பசுமைவெளி விமான நிலைய திட்டம் மண்டலம் 1, திம்ம சத்திரம் காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் கருத்துக்கள் தெரிவிக்கப்படவில்லை என்றால், அவை ஏற்றுக் கொள்ள மாட்டாது எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது



 600 - வது நாள் போராட்டம் 


 

இந்நிலையில் இன்று 600வது நாளை ஒட்டி ஏகனாபுரத்திலிருந்து 200- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவர்கள் வயல்நிலங்கள் வழி வரை ஊர்வலம் நடந்து வந்து அறுவடைக்கு தயாராகி உள்ள விவசாய நிலங்கள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்கள் அவர்களின் விவசாய நிலத்தில் பெண்கள் விழுந்து புரண்டு வாயில் அடுத்தபடி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கிராம மக்கள் வயல்வெளியில் நின்று கொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பின் செய்தியாளர்கள் சந்தித்த பரந்தூர் பசுமை விமான நிலைய போராட்டக்கார குழு செயலாளர் சுப்பிரமணியன் பேசுகையில்,

 

தொடர்ந்து 600 ஆவது நாளாக பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு தெரிவித்து மாலை நேரங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வந்த நிலையில் இந்த தமிழக அரசு எவ்வித முன்ன நடவடிக்கை எடுக்காமல் செவி சாய்க்காததால் இன்றுடன் தொடர் போராட்டத்தை கைவிட்டு சட்டப் போராட்டத்தில் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தனர். மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போராட்டக்கார குழு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போராட்டக்காரர் குழுவினர் அறிவித்தனர். 



 

 

மேலும் பரந்தூர் பகுதியில் 24 சதவீத நீர்நிலைப் பகுதிகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியிலும் உள்ள நிலையில் பரந்தூர் பகுதியை விட பன்னூர் பகுதியில் நீர்நிலைகள் பகுதிகளும் மற்றும் குடியிருப்பு பகுதிகள் குறைவாக இருந்து வந்த நிலையில், பன்னூர் இடத்தை விட பரந்தூர் இடத்தை தேர்வு செய்வதற்கு தமிழக அரசுக்கு என்ன அதிக நோக்கம் உள்ளது என கேள்வி எழுப்பினர்.