காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக உலகத்தில் இருக்கக்கூடிய முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலையும் அப்பகுதியில் அமைந்திருக்கின்றன. 


சாம்சங் தொழிற்சாலை


அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏசி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.




இந்நிலையில் சாம்சங் தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் சிஐடியு சங்கம் துவக்கப்பட்டது. சங்கம் அமைத்தற்கான அறிமுக கடிதம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது . இதனை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மேலும் ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை குறித்து நிர்வாகத்திற்கு மகஜர் அனுப்பப்பட்டது. இதையும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என தொழிலாளர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.


ஊழியர்களின் குற்றச்சாட்டுகள் என்ன ?


தொழிற்சங்கத்தை ஏற்க மறுப்பது மட்டுமல்ல தொழிற்சங்கத்தை உடைப்பதற்கு சங்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து, கடந்த 85 நாட்களாக நிர்வாகம் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.




 


இந்நிலையில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டமும் நிர்வாகிகள் கூட்டம் எடுத்த முடிவின் அடிப்படையில் , சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். இதன் அடிப்படையில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


ஊழியர்களின் கோரிக்கை என்ன ?


போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்க நிர்வாகிகள், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியூ சங்கத்தை அங்கீகரித்திட வேண்டும். சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க சிஐடியூ உறுப்பினர்களை நிறுவனம் உருவாக்கும் போட்டி தொழிலாளர் கமிட்டியில், இணையுமாறு ஆலைக்குள் பணி செய்யும் தொழிலாளர்களை அச்சுறுத்துவது கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது போன்ற வன்முறை நடவடிக்கைகளை கைவிட வேண்டும். போட்டி அமைப்பை உருவாக்குவதை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும்.




சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் அமைத்துள்ள சிஐடியூ தொழிற்சங்கத்தை பதிவு செய்ய விடாமல் , தொழிற்சங்க பதிவாளர் அலுவலகத்தை நிர்பந்திப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிஐடியு சார்பில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . 


பேச்சுவார்த்தைக் தோல்வி. 


இந்தநிலையில் இந்தப் போராட்டம் தொடர்பாக, தொழிற்சாலை நிர்வாகம், தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மூன்று முறை நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தது .




தொடரும் போராட்டம் 


பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.