மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி தகவல்.
வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு உயர் கல்வி படிக்கும் மாணவ மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் படித்து முடித்து இளைஞர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பது, கடினமான ஒன்றாக உள்ளது. அதேபோன்று அரசு வேலை என்பதும் , பலருக்கு எட்டாக்கனியாக உள்ளது.
இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தனியார் நிறுவனங்களில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர அரசு பல்வேறு வகைகளில் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி, வங்கி கடன்கள் பெற்றுக் கொடுத்து அவர்களை தொழில் முனைவோர் ஆக்குவது, மேலும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி வேலைவாய்ப்பை பெற்று தரும் பணியினை அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு முகாம்
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை (அரசு விடுமுறை நாள் தவிர்த்து) அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும், ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்களின் அமைச்சர் தலைமையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.09.2024 சனிக்கிழமை அன்று பச்சையப்பன் ஆடவர் கல்லூரி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது.
பங்குபெறும் நிறுவனங்கள் என்ன ?
இம்முகாமில் ASHOK LEYLAND, HYUNDAI, SUTHERLAND, FLEXTRONICS, TVS & MOTHERSON போன்ற 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அதுசமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ள வேலை நாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 21.09.2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரிக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் மேலும் விவரங்களுக்கு 044-27237124, 044-27238894 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு
ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.