காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும். இதன் விளைவாக, வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளம் மற்றும் புயல் போன்ற மோசமான வானிலை நிகழ்வுகளை சமாளிக்க, கடந்த ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில் பாதிக்கப்படக்கூடிய கிராமங்களில் அதிக கவனம் செலுத்தி தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


24 மணி நேரமும் செயல்படும்


மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலும், வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் வெள்ள கண்காணிப்பு குழு அமைத்து வெள்ளக் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை உட்பட காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கண்காணிப்புப் பிரிவு செயல் படும் என்று தெரிவிக்கப்படுகிறது கடுமையான வெள்ளம் அல்லது புயல் சூழ்நிலையில் கண்காணிப்புப் பிரிவு 24 மணி நேரமும் செயல்படும்.


25% கூடுதல் அளவு நைட்ரஜன்


பருவமழை காலத்தில் எதிர்பாராத சூழ்நிலையை எதிர்கொள்ள தரமான விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற இடுபொருட்களை போதுமான அளவு வேளாண்மை விரிவாக்க மையங்களில் மற்றும் தனியார் விற்பனை மையங்களில் இருப்பு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.


உற்பத்தித்திறன் இழப்பைத் தவிர்க்க முதிர்ச்சியடைந்த தானியங்களை அறுவடை செய்தல், அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க வேளாண்மை துறையால் விநியோகிக்கப்பட்ட தார்ப்பாய்களைப் பயன்படுத்துதல், பயிர் இழப்பைத் தடுக்க வயல்களில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றுதல், அதிக மழையினால் ஏற்படும் கசிவு இழப்பை சமாளிக்க பரிந்துரைக்கப்பட்டதை விட 25% கூடுதல் அளவு நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் மேல் உரமிடுதல், குறைபாடு ஏற்பட்டால் யூரியா மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை இலைவழி தெளிக்கவும், பண்ணைக் குட்டைகள் மூலம் தாழ்வான பகுதிகளில் அதிகப்படியான மழை நீரை சேகரித்தல், பூச்சிகள் மற்றும் நோய்களை நெருக்கமாக கண்காணித்தல் ஆகிய பொது நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.


வெள்ளம் சூழ்ந்த சூழ்நிலையில் நெற்பயிர்களுக்கான மேலாண்மை நடவடிக்கைகள்:


அறுவடை நிலை: பயிர் நிறமாற்றத்தினை தவிர்க்க தானிய முதிர்வு நிலையில் உள்ள வயல்களில் நீர் முழுவதுமாக வடிகட்டப்பட வேண்டும். இதனால் தானியங்கள் முளைப்பதையும் தவிர்க்கலாம் தூர் பருவ நிலை (ஒரு ஏக்கருக்கு): 1 கிலோ ZnSO4 + 2 கிலோ யூரியாவை 200 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, மழை நின்றவுடன் இலை வழியாகத் தெளிக்கவும்.


அதிகபட்ச தூர் பருவ நிலை (ஒரு ஏக்கருக்கு) : தண்ணீரை வடிகட்டிய பிறகு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலவையை ஒரு இரவில் வைத்திருந்து, மறுநாள் 17 கிலோ பொட்டாஷுடன் சேர்த்து மேல் உரமிட்டு ஊட்டச் சத்து குறைபாடினை தவிர்க்கலாம் . பொருளாதார வரம்பு மட்டத்திற்கு மேல் பூச்சி பாதிப்பு ஏற்பட்டால், உரிய பூச்சி விரட்டிகளை பயன்படுத்தி நோய் மற்றும் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. 


தொலைபேசி எண் அறிவிப்பு


மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதிக்கான வட்டார வேளாண் விரிவாக்க மையத்தினை தொடர்பு கொள்ளலாம் எனவும், வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் தெரிவித்திட 7418106891 என்ற அவசர எண்ணிற்கு அழைக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.