காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளூர் அடுத்த கணபதிபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரின் 5 வயது குழந்தை நிர்மல்ராஜ், வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டிருந்தபோது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் கடித்ததில் வாய் பகுதியில் பலத்த காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
நொடி பொழுதில் நடந்த கொடூரம்.
காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளூர் அடுத்த கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் 5 வயது மகன் நிர்மல்ராஜ் வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டதும் கடிக்க முயன்றுள்ளது. நொடி பொழுதில் தெரு நாய் குழந்தையின் வாய்ப்பகுதி முழுவதும் கடித்துக் குதறியதில் குழந்தையின் வாய்ப்பகுதி பலத்த காயம் ஏற்பட்டது.
குழந்தையின் அலறல் சத்தம்
குழந்தை நிர்மல்ராஜ் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை பாலாஜி நாயிடம் இருந்து குழந்தையை மீட்க முயலும் பொழுது பாலாஜியையும் கடித்துவிட்டு நாய் தப்பி ஓடி உள்ளது. உடனடியாக குழந்தையை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தொடரும் நாய்க்கடிகள்
சமீபகாலமாகவே தெருநாய்கள் பிரச்சனை அதிகம் இருக்கும் நிலையில் அப்பொழுது பொதுமக்களும் குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் தற்போது ஐந்து வயது சிறுவனை வாய் முழுவதும் கடித்துக் குதறிய தெரு நாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
தெரு நாய்கள் அவ்வப்பொழுது நகராட்சி மற்றும் ஊராட்சி சார்பில் கருத்தடை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதை முறையாக கண்காணித்து தெருநாய்கள் கருத்தடை செய்யப்படாமல் உள்ளது. இதன் காரணமாக தெரு நாய்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இதுபோக தெரு நாய்களின் அட்டகாசம் இருப்பதாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதுபோன்று நாய்களின் பெருக்கத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.