காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் ரூ.26.65 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
படப்பை மேம்பாலம்
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையானது, தாம்பரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. படப்பையின் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை (SH-48) ஒரகடம் சிப்காட்டுடன் இணைகிறது. மேலும் தாம்பரத்திலிருந்து தொழிற்சாலைகள் நிறைந்த ஒரகடம் சிப்காட் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் வண்டலூர் - வாலாஜாபாத் சாலையின் இடையில் நெரிசல் மிகுந்த பகுதியாக படப்பை உள்ளது.
படப்பை பகுதியை இலகுவாக கடந்து செல்ல ஏதுவாக புதிதாக மேம்பாலம் கட்டும் பணிக்கு கடந்த 02.12.2019 அன்று ரூ.25.522 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்ட நிலையில்,ரூ.26.65 கோடிக்கு கடந்த 16.11.2021 அன்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மேம்பால கட்டுமான பணிகளானது சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றது.
மக்கள் பயன்பாட்டிற்கு வந்த மேம்பாலம்
இந்நிலையில் 12 தூண்களுடன், பாலத்தின் 11 ஓடுதளங்கள் மற்றும் அணுகு சாலைகள் முழுமையாக முடிக்கப்பட்டு, இம்மேம்பால கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவுற்ற நிலையில், இன்றைய தினம் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலையில், புதிதாக கட்டப்பட்ட இம்மேம்பாலத்தை தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தொழில் வளம் பெருகும்
இம்மேம்பாலத்தினால் சாலமங்களம், ஆரம்பாக்கம், படப்பை, மண்ணிவாக்கம் மற்றும் கரசங்கால் கிராமங்களில் உள்ள மக்கள் மிகுந்த பயன்பெறுவர். மேலும் முன்னணி கார் தயாரிப்பு தொழிற்சாலைகளான நிசான், அப்பல்லோ டயர்ஸ், ஆல்ஸ்டோம் J&D. இன்பெக் இந்தியா ஆகிய பெருநிறுவனங்களை உள்ளடக்கிய ஓரகடம் சிப்காட் பகுதியை வண்டலூர்-வாலாஜாபாத் மாநில நெடுஞ்சாலை (SH-48) இணைக்கின்றதால் இப்பகுதியில் தொழிற்சாலைக்கு செல்லும் மக்கள் போக்குவரத்து சிரமமின்றி செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது.
மேலும், இப்பாலத்தினால் இப்பகுதியில் தொழிற்வளம் பெருகும் வாய்ப்பும் அதிகரிக்கும். பாலத்தின் தூண்களை சுற்றியுள்ள பாதுகாப்புச் சுவர் பாலம் திறக்கப்பட்டவுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பாலம் கனரக போக்குவரத்து நிறைந்த நெரிசல் மிகுந்த பகுதியில் கட்டப்பட்டதால் போக்குவரத்து மேலாண்மையுடன் பணிகளை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இந்த பாலம் இந்த திறக்கப்பட்ட நிலையில், பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது .