Kanchipuram Rajaji Market Open Date: காஞ்சிபுரத்தில் மிகப் பழமையான ராஜாஜி மார்க்கெட் வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் செயல்பட உள்ளது.


காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி மார்க்கெட்:


காஞ்சிபுரம் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் ராஜாஜி காய்கறி மார்க்கெட், ஆங்கிலேயர் காலத்தில், 1907ம் ஆண்டு கட்டப்பட்டது. இதனை அடுத்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், மார்க்கெட்டை 1933ல் கிழக்கு பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து 1945ல் மேற்கு பகுதி என நுழைவு ஏற்படுத்தி, விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த மார்க்கெட், பாழடைந்து காணப்பட்டதால், புதிய மார்க்கெட் கட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி முன்வந்தது. 


புதிய ராஜாஜி மார்க்கெட்:


இதனால் புதிய ராஜாஜி மார்க்கெட் கட்டும் பணிகள் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ராஜாஜி மார்க்கெட் கட்டும் பணி தொடங்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு பணி தாமதம் உள்ளிட்ட நிர்வாக சிக்கல்க்க காரணமாக மார்க்கெட் கட்டும் பணி தாமதமானது. ஒரு வழியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மார்க்கெட் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வழியாக ராஜாஜி மார்க்கெட் திறந்து வைத்தார். முதலமைச்சர் திறந்து வைத்த பிறகு அடுத்த சில நாட்களில், ராஜாஜி மார்க்கெட் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரு மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 


அரசியல் குறுக்கீடு


ஆனால் அரசியல் குறுக்கீடு காரணமாக, கடைகளில் டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசியல் குறுக்கீடுகள் இருந்ததாக குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் இருந்தன. இதனால் கடைகளை டெண்டர் விடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. 


டெண்டர் உத்திரவாதம் தொகை டெபாசிட் தொகை போன்றவற்றை குறைக்க வேண்டும் என ராஜாஜி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது. ஒரு கோடி நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், டெண்டர் தொகை 50 லட்சம் மாநகராட்சி நிர்வாகம் குறைத்தது. 


இது தொடர்பாக டெண்டர் விடும் பணியும் மூன்று முறை மாநகராட்சி நிர்வாகம் ஒத்தி வைத்தது. இதனால் வியாபாரிகளும் ஒருபுறம் கடும் அதிருப்தி அடைந்தனர். இது தொடர்பாக டெண்டர் விடப்பட்டது. ராஜாஜி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் மார்க்கெட் கடைகளை அதிகபட்ச தொகையாக, 1.71 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 


ஒருவழியாக திறப்பு விழா!


மார்க்கெட்டில் கட்டப்பட்டுள்ள உணவகம் கடைகள் மற்றும் கிடங்குகள் என 258 கடைகளுக்கும் வாடகை வசூலிக்கும் உரிமையை மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் டெண்டர் மூலம் பெற்றது. இதனால் தொடர்ந்து புதிய மார்க்கெட்டில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 


தொடர்ந்து ராஜாஜி மார்க்கெட் வருகின்ற 14ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என வியாபாரிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மார்க்கெட் ராஜாஜி மார்க்கெட் மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் செயல்பட உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரே இடத்தில் குறைந்த விலையில் ராஜாஜி மார்க்கெட்டில் காய்கறிகள் கிடைக்கும் என்பதால், பொதுமக்களிடையே இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | Chennai Bengaluru Expressway: 2 மணி நேரம் தான், இனி பெங்களூரு டூ சென்னை பறக்கலாம் - புதிய தேசிய நெடுஞ்சாலை தயார், இவ்ளோ அம்சங்களா?