காஞ்சிபுரம் மாநகரத்திற்கு பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகள் பழமையான நகரமாகவும் காஞ்சிபுரம் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் பட்டு நகரமாகவும், கோயில் நகரமாகவும் இருந்து வருகிறது. இது தவிர காஞ்சிபுரம் மாவட்டம் தொழில் வளர்ச்சிக்கும் தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய பங்களித்து வருகிறது. இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் காஞ்சிபுரத்திற்கு அடிப்படை வசதிகள் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் - Kanchipuram Bus Stand
காஞ்சிபுரம் நகர் பகுதியில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்தில், நாள் ஒன்றுக்கு முன்னுருக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. காஞ்சிபுரத்திலிருந்து சென்னை, செங்கல்பட்டு, வேலூர், பெங்களூர், வந்தவாசி, பாண்டிச்சேரி, திண்டிவனம், விழுப்புரம் ,திருச்சி, திருவண்ணாமலை, திருப்பதி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் - Kanchipuram New Bus Stand
காஞ்சிபுரத்தில் தற்போது உள்ள பேருந்து நிலையம் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அப்போதுள்ள மக்கள் தொகை வாகன வசதிக்கு அவை பொறுத்தமாக இருந்தது. மக்கள் தொகை அதிகமான நிலையில், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை இருந்து வருகிறது. இந்தநிலையில், காஞ்சிபுரத்துக்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிதியாக 38 கோடி ரூபாய் ஒதுக்கியது. இருப்பினும் இன்னும் புதிய பேருந்து நிலையத்திற்கு இடம் தேர்வு செய்வதில் இடுப்பறி இருந்து வந்தது.
பொன்னேரிக்கரை பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 28 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டிய நிலை இருந்ததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மற்றொரு இடம் தேர்வு செய்தது அதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது.
புதிய பேருந்து நிலையம் எங்கு அமைகிறது ? Kanchipuram New Bus Stand Location
இந்தநிலையில் பொன்னேரிக்கரை பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் அருகே காஞ்சிபுரம் நகருக்கு செல்லும் வழியில், புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான தோப்பு புறம்போக்கு இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது. 19 ஏக்கர் பரப்பளவு பேருந்து நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அமைப்பதற்கு 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பணிகள் தொடங்குவது எப்போது ?
ஏற்கனவே பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 12 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. போக்குவரத்து பணிமனையும் அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்தில் இதற்கான டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று, பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் காஞ்சிபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளது. புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு காஞ்சிபுரம் நகர் பகுதியில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.