காஞ்சிபுரம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். விபத்து சம்பவம் குறித்து பாலுசெட்டி சத்திரம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த சென்ன சமுத்திரம் மலைமேடு பகுதியைச் சேர்ந்த சேட்டு, என்பவரின் மனைவி கஜலட்சுமி, வயது (40) இவர்களது மகன்கள் மதன், (20) மனோஜ், (18). இந்தநிலையில் இன்று காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி பகுதியில் உறவினர் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக கஜலட்சுமி, மதன், மனோஜ், ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.


துக்க நிகழ்ச்சி


துக்க நிகழ்வில் பங்கேற்ற பின் மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் ஓச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் முன்னே சென்ற கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முற்பட்டபோது லாரியின் பின் சக்கரத்தில் இருசக்கர வாகனம் சிக்கி விபத்துக்குள்ளானது.


விபத்தில் கஜலட்சுமி, மற்றும் மதன், ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மனோஜ், மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.


சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு


விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றிய பாலுசெட்டி சத்திரம் போலீசார் உடற்கூர் ஆய்விற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துக்க நிகழ்ச்சி பங்கேற்க வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகன்கள் உட்பட மூன்று பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் விபத்து நடந்த இடத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் ஆய்வு மேற்கொண்டு விபத்து குறித்து பாலு செட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த விபத்து தொடர்பாக காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது : ராணிப்பேட்டை மாவட்டம் , ஓச்சேரி அடுத்த சின்ன சமுத்திரம் மலைமேட்டு பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி. இவர் திருப்புட்குழி கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவர் இறந்த நிலையில் அவரது நிகழ்வில் கலந்து கொள்ள தனது மகன்களான மனோஜ் மற்றும் மதன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் திருப்புட்குழி கிராமத்திற்கு வந்துள்ளார்.


தாமல் காலணி அருகே எதிர்பாராத விதமாக முன்னே சென்ற சரக்கு லாரியை முந்தி செல்ல முயன்ற போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்த போது சரக்கு லாரியின் பின் சக்கரம் ஏறி விபத்து ஏற்பட்டது இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.