காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு, நடைபெற்றது. மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 32 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 33 வார்டுகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியது. அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும், பிற இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். சுயேட்சைகள் பலரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆரம்பமே போட்டோ போட்டி
திமுக சார்பில் மகாலட்சுமி யுவராஜ் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக திமுகவை சேர்ந்த சூர்யா என்பவரும் போட்டியிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இருந்தும் மேயர் தேர்தலில் மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரத்தின் முதல் மேயராக பதவி ஏற்றார். துணை மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருநாதன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். என்னதான் பெரும்பான்மையை நிரூபித்து காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி பொறுப்பேற்று இருந்தாலும், சில மாதங்களிலேயே கவுன்சிலர்களால் பிரச்சனை எழத் துவங்கியது.
எதிர்க்கட்சி கவுன்சிலர்களால் பிரச்சனை
ஆரம்ப கட்டத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் பல்வேறு வகையில் பிரச்சனைகளை எழுப்ப தொடங்கினர். தங்கள் வார்டுகளுக்கு நிதி ஒதுக்குவதில்லை, மாநகராட்சி விஷயங்களில் மேயரின் கணவர் யுவராஜ் தலையிடுகிறார். ஒரு சில கவுன்சிலர்கள் நினைப்பது மற்றும் நடக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் முன் வைத்தனர். ஒவ்வொரு முறை மாமன்ற கூட்டம் நடைபெறுகின்ற பொழுதும், கூட்டம் சலசலப்புடன் நடைபெற்று வந்தது.
திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி
இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக திமுகவை சார்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பத் தொடங்கினர். இதற்கு முக்கிய காரணமாக, திமுக கவுன்சிலர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதையும், அவர்களுடைய வார்டுகளுக்கு நிதி ஒதுக்கிடும் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை திமுக கவுன்சிலர்கள் முன்வைக்க தொடங்கினர். ஆரம்ப கட்டத்தில் இந்த பிரச்சனை சிறிதாக இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க துவங்கியது.
பிரச்சனை மாவட்ட செயலாளரிடம் பிரச்சனை கூறுவது, இருதரப்பையும் அழைத்து மாவட்டச் செயலாளர் சுந்தர் சமாதானம் செய்வது எனத் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை மாமன்ற கூட்டத்தில் எதிரொலிக்க துவங்கியது. திமுகவின் மேயர் எதிர்ப்பு கவுன்சிலர்களுடன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயரும் மேயருக்கு எதிராக போர் கொடி தூக்க துவங்கினர்.
எதிரிக்கு எதிரி நண்பன்
காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் பதவி ஏற்றதிலிருந்து, பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியது. நேரடியாகவே திமுக கவுன்சிலர்கள் கமிஷனருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை மாமன்ற கூட்டத்தின் முன்வைக்க துவங்கினர். ஆளும் கட்சி கவுன்சிலர்களாலே மாமன்ற கூட்டம் முழுமை பெறாமல் சலசலப்புடன் முடிவடைய துவங்கியது. ஆளும் கட்சி கவுன்சிலர்களுடன் அதிமுக, பாமக உள்ளிட்ட பிற கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்களும் சேர்ந்து கொண்டு மேயருக்கு எதிராக குடைச்சல் கொடுக்கத் தொடங்கினர்.
சமாதான பேச்சு வார்த்தை
எதிர்க்கட்சி கவுன்சிலர்களுடன் இணைந்த திமுக கவுன்சிலர்கள், நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சியில் பிரச்சினை அதிகரிக்கவே சமாதான பேச்சு வார்த்தைகளும் பலமுறை நடைபெற்றது. அமைச்சர் நேரு அனைத்து கவுன்சிலர்களையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தையும் செய்து பார்த்தார் இருந்தும் மேயர் எதிர்ப்பு திமுக கவுன்சிலர்கள் பின்வாங்கவில்லை.
தொடரும் காய் நகர்த்தல்..
இப்பொழுது இருக்கும் சூழலில் மேயர் தரப்பிற்கு எதிராக 33 கவுன்சிலர்கள் உள்ளனர். தொடர்ந்து நேர் எதிர் தரப்பு கவுன்சிலர்கள், நிலை குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து மேயருக்கு நெருக்கடியை அதிகரித்தனர். இதுபோக ஆதரவாக இருக்கும் மேற்கு மண்டல தலைவர்களுக்கு எதிராகவும், காய்களை நகர்த்த துவங்கி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள இரண்டாவது மண்டல குழு தலைவர் சந்துரு மீதான தன் ஆதரவை விளக்கி கொள்வதாக கவுன்சிலர்கள் கமலக்கண்ணன், ஷர்மிளா, புனிதா, குமரன், ஷாலினி, விஜிதா மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகனிடம் கடிதம் அளித்துள்ளனர். இரண்டாவது மண்டல குழு தலைவராக உள்ள சந்துரு, மேயர் தரப்பின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி வாய்ப்பா ?
கோவை மற்றும் நெல்லை ஆகிய மேயர்கள் பதவி விலகலை அடுத்து காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சி மேலிடம் இறுதிவாய்ப்பை மேயர் தரப்புக்கு தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிருப்தியில் இருக்கும் கவுன்சிலர்களை சரி செய்ய தலைமை அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த கட்டமாக மேயர் தரப்பு ஒவ்வொரு கவுன்சிலர்களையும் சந்தித்து பிரச்சனையை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இதுவே மேயர் மகாலட்சுமிக்கு இறுதி வாய்ப்பு என கருதப்படுகிறது