காஞ்சிபுரம் மாவட்டத்தில்கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 2024-25ம் ஆண்டில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்தல்,  அதற்கான தகுதிகள் என்னென்ன, தெரிந்து கொள்வோம்.


 


கால்நடை பராமரிப்புத்துறை 2024-25ம் ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறமையும் ஆர்வமும் உள்ள 3 முதல் 6 தொழில்முனைவோர் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முக்கிய தகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.


 



  1. மேற்காணும் திட்டம் 2024-25 ஆம் ஆண்டில் அனைத்து (சென்னை நீங்கலாக) மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளது.


 



  1. நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு  (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு), மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில்  50 சதவீதம் மானியம்  (ரூ.1,56,875)  மாநில அரசால் வழங்கப்படும் .


 



  1. திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ (அ) தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.


 



  1. ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.


 



  1. பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும்.  இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.


 



  1. மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 2023-24ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளோ அவர்தம் குடும்பத்தினரோ பயனடைந்திருக்கக் கூடாது.


 



  1. கட்டுமானப்பணிகள், தீவனம் (ம) உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும்.


 



  1. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டத்தின்கீழ்நாட்டுக்கோழி வளர்ப்பில் திறமையும் ஆர்வமும் உள்ள முதல் 6 தொழில்  முனைவோர் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


 



  1. விண்ணப்பிக்கும் பயனாளிகளிடமிருந்து ஆதார் அட்டை நகல்,  பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம் ) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி,  2022- 23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் பெறப்படவேண்டும்.


 



  1. திட்டத்தின் விவரங்கள் குறித்து உள்ளூர் செய்தித்தாள்களில் கால்நடை நிறுவனங்கள், உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகங்கள் போன்றவற்றில் பரந்த விளம்பரம் செய்யப்பட வேண்டும்.


 



  1. குறைந்தபட்ச இலக்கான 3 தகுதி வாய்ந்த பயனாளிகளை ஜூலை-15-க்குள் தேர்வு செய்து மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்று பயனாளிகளின் தகுதி உறுதி செய்யும் ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்பட்டு தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.


 



  1. மாவட்டங்களிலிருந்து பெறப்படும் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளின் பட்டியலிலிருந்து, முன்னுரிமை அடிப்படையில் 100 பயனாளிகள், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் அவர்களால் இறுதி செய்யப்படும் .


 


பொதுமக்கள் அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.