காஞ்சிபுரத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தில் இருந்து விரைவு நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் என நீதிமன்ற நீதிமன்றமாக மாறி 32 ஆண்டுகளுக்குப் பிறகு நீதியை பெற்ற இளைஞன். தவறான சிகிச்சைகள் இழந்த கைக்கு இழப்பீடு வேண்டாம் தகுதிக்கேற்ப அரசு வேலை வேண்டுமென இளைஞர் கோரிக்கை வைத்துள்ளார்.
கைக்குழந்தைக்கு தவறான சிகிச்சை என புகார்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் வசித்து வரும் ஜெகன்னாதன் மற்றும் சாந்தி தம்பதியருக்கு கடந்த 1991 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் செங்கழுநீரோடை தெருவில், உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அக்குழந்தைக்கு பெற்றோர் தினேஷ் எனப் பெயரிட்டுள்ளனர்.(இப்போது வயது 34) பிறந்த ஒரு மாதத்தில் குழந்தை மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கும் அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கும் அழைத்து சென்றுள்ளனர்.
இலவச சட்ட உதவி மையம்
சென்னை மருத்துவமனையில் குழந்தையின் வலது கையில் ஊசி செலுத்தும் போது கை வீங்கியதால் வலது கையை அறுவைச்சிகிச்சை செய்தால் தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என்று கூறியதால் பெற்றோர்கள் சம்மதத்துடன் வலது கையில் முழங்கை வரை அறுவைச்சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.
தவறான மற்றும் கவனக்குறைவான சிகிச்சையால் என் மகன் தினைஷின் வலது கையை மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை செய்து எடுத்து விட்டனர் என்று தந்தை ஜெகன்னாதன் நுகர்வோர் நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் மூலமாக வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற வழக்கு தள்ளுபடி - தொடர்ந்த சட்ட போராட்டம்
இலவச சேவை நுகர்வோர் சட்டத்துக்குள் வராது என்பதால் சார்பு நீதிமன்றத்திற்கும், அதனைத் தொடர்ந்து வழக்கை விரைவாக முடிக்க விரைவு நீதிமன்றத்துக்கும் ஜெகன்னாதன் சென்றுள்ளார் ரூ.15 லட்சம் இழப்பீடாக தர வேண்டும் என்று ஜெகன்னாதன் கேட்டதால் இத்தொகை அதிகார வரம்புக்குள் வராது என விரைவு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
விடா முயற்சியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகன்னாதன் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றமே விசாரிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து இவ்வழக்கினை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாணைக்கு எடுத்துக் கொண்டது. மனுதாரர் தரப்பில் இலவச சட்ட உதவி மையத்தின் வழக்குரைஞர் என்.கீதா ஆஜரானார்.
32 ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி
எதிர் மனுதாரர்களான காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி 3 பேரும் இழப்பீடாக பாதிக்கப்பட்ட தினேஷ்க்கு ரூ.10 லட்சமும், வழக்கு தொடுத்த 1998 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரை 27 ஆண்டுகள் வரை 6 சதவிகிதம் வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி தீப்தி அறிவுநிதி தீர்ப்பளித்துள்ளார்.
32 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு நிவாரணம் கிடைத்திருந்தாலும், அரசு வேலை வழங்க வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக இருந்து வருகிறது. நடுத்தர குடும்பம் வழக்கு செலவுக்கு பணம் செலவழிக்க முடியாது என்பதால், இலவச சட்ட உதவி மூலமாகவே இந்த தீர்ப்பை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.