காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வார்டுகளில், 1975 ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளது.  புதியதாக இணைக்கப்பட்ட   செவிலிமேடு,  ஓரிக்கை,  திருக்காலிமேடு ஆகிய இடங்களுக்கு  புதிய பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. புதிய பாதாள சாக்கடை இணைப்புகளுக்காக உலக வங்கி நிதி உதவியுடன் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை இணைப்புக்கான பணிகள்  துவங்க உள்ளன.


சுகாதார சீர்கேடு


ஒருபுறம் புதிய பாதாள  இணை சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட உள்ள நிலையில், மறுபுறம்  ஏற்கனவே உள்ள பாதாள சாக்கடை குழாய் மற்றும் தொட்டியில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு அடைப்பு ஏற்படுவதால் பல இடங்களில் கழிவுநீர்,  செல்ல முடியாமல்வெளியேறி வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி  23-வது வார்டு உள்ள யதோத்தகாரி மாட வீதிகள் ,நேதாஜி தெரு, லாலா குட்டை , மாகாளியம்மன் கோவில் தெரு வரதராஜபுரம் பின் தெரு, நேதாஜி நகர், ஆகிய அனைத்து தெருக்களிலும் மேனுவல் வழியாகவும், வீட்டினுள் கழிவுநீர் தேங்கியும், பொது மக்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் கழிவுநீர் வழிந்தோடி கொண்டு இருக்கிறது.



 


பல்வேறு இடங்களில் அடைப்பு


குறிப்பாக பல்வேறு இடங்களில் அடைப்பு அதிகமாக இருப்பதால், கழிவுநீர் இருந்து வெளியேற முடியாமல், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன. அதேபோன்று சாலைகள் முழுவதும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சிகளை பார்க்க முடிகிறது.  பல ஆண்டுகளாகவே இந்த பிரச்சனை இருப்பதாகவும்,  ஒவ்வொரு முறையும்  தற்காலிக தீர்வுகளை கொடுப்பதாகவும் நிரந்தர தீர்வுகள் கிடைப்பதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.  இதன் காரணமாக நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.


எங்கு என்ன பிரச்சனை ?


இதுகுறித்து யதோத்தகாரி  வடக்கு மாடவீதி பகுதியை சேர்ந்த, காந்தி சுதந்திர தாஸ்  நம்மிடம் பேசுகையில்,  பல ஆண்டுகளாகவே இந்த பிரச்சனை எங்கள் பகுதியில் இருந்து வருகிறது. அடைப்பு காரணமாக கழிவு நீர் முறையாக,  பாதாள சாக்கடை வழியாக  செல்ல முடியாததால், கழிவு நீர் பின்னோக்கி  வீடுகளுக்கு வந்து விடுகின்றன. வீடுகளில் தண்ணீர் தேங்கி நிற்க வேண்டிய காட்சி பார்க்க முடிகிறது.



எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக கழிவுநீர் வருவது தொடர் கதையாகியுள்ளது.  இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் மாநகராட்சி தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்தார்.


இதுகுறித்து மாநகராட்சி கவுன்சிலர் M.புனிதா   சம்பத்திடம்தொடர்பு கொண்டு பேசினோம் :  23-வது வார்டு பகுதியில் தொடர்ந்து, இந்த பிரச்சனை இருந்து வருகிறது. இது குறித்து பலமுறை நகராட்சி ஆணையர் மற்றும் மேயரிடம் புகார் அளித்திருக்கிறோம். பிரதான சாலையில்  பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. வணிக நிறுவனங்களில்  இருந்து வெளியேறும் கழிவு நீர் தொட்டிகளில் சுத்திகரிக்கப்பட்டு பாதாள சாக்கடை இணைப்பில்  அனுப்பி வைக்க வேண்டும்.  




ஆனால் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் அதை பின்பற்றுவது கிடையாது. எனவே  பிரதான சாலையில் நேரடியாக அனைத்து கழிவுகளும் கலப்பதால்,  சீக்கிரம் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் வெளியேற முடியாமல் பின்னோக்கி செல்லும் சூழல் ஏற்படுகிறது.  இதுவே மிக முக்கிய பிரச்சனை என குற்றச்சாட்டை முன் வைக்கிறார் .


தீர்வுதான் என்ன ?


விதிகளை பின்பற்றி கழிவுநீர்கள் வெளியேற்றப்படுகிறதா என்பதை மாநகராட்சி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.  மேலும் இந்த பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்கும் வண்ணம், புதிய  ஸ்டேஷன் ஏற்படுத்தித் தரலாம் அல்லது அருகில் இருக்கக்கூடிய பம்பிங் ஸ்டேஷனுக்கு நேரடியாக பிரதான குழாய் இணைப்பை மாற்றினாலும் பிரச்சினை   தீரும்  எனவே, பகுதி மக்களின் கோரிக்கையை  பரிசளித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தெரிவித்தார்