பிரதம மந்திரி பயிர் காப்பீடுத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் II (சம்பா) பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15ம் தேதி கடைசி நாள் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.

Continues below advertisement

 நெல் பயிர் காப்பீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடுத்திட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டில் ரபி (சிறப்பு) பருவத்தில் நெல் II பயிர் 464 கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெல் II பயிருக்கான விதைப்பு காலம் ஆகஸ்ட் முதல் நவம்பர் ஆகும். ஆகையால் நெல் II (சம்பா) பயிரிடும் விவசாயிகள் அனைவரும் வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு ரூ.545 பிரீமியம் தொகை செலுத்தி, பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேவையான ஆவணங்கள் என்னென்ன ?

பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், நடப்பு வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகிய இடங்களில் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம். தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண்கள், பரப்புகள் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து காப்பீடு செய்த பின் அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

பயிர் காப்பீட்டின் முக்கியத்துவம் என்ன ?

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்வது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இன்றைய சூழலில் பருவநிலை மாற்றம் காரணமாக, முதலில் பாதிப்படைவது விவசாயிகளாக இருந்து வருகிறார்கள். திடீரென பெய்யும் மழை காரணமாக பயிர்கள் பாதிப்படுகிறது. எனவே விவசாயிகள் பயிர்கள் பாதிப்படையாமல் இருக்க, பாதிப்படைந்தாலும் அதில் இங்கிருந்து மீண்டு வருவதற்கு இந்த பயிர் காப்பீடு பெரும் அளவில் பயனளிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.