முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்திய பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் ஒரு புரட்சி திட்டம் என  எதிர்க்கட்சிகளே பாரட்டி வரும் நிலையில், இத்திட்டத்தின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் சாதனை படைத்து வருகிறது.


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்


ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும், பள்ளிகளில் குழந்தைகளின் வருகையை அதிகரிக்கவும் / தக்க வைக்கவும், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் இத்திட்டம் முதல்வரின் நேரடி பார்வையில் தமிழ்நாடு அரசால்செயல்படுத்தப்பட்டு வருகிறது.


காஞ்சிபுரம் காலை உணவுத் திட்டம்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை சிற்றுண்டியானது, திங்கட்கிழமையில் ரவை உப்புமா, காய்கறி சாம்பாரும், செவ்வாய் கிழமையில்  கோதுமை ரவை கிச்சடி, காய்கறி சாம்பாரும்,  புதன் கிழமையில் வெண்பொங்கல், காய்கறி சாம்பாரும், வியாழக்கிழமையில் அரிசி உப்புமா, காய்கறி சாம்பாரும், வெள்ளிக்கிழமை ரவை காய்கறி கிச்சடி காய்கறி சாம்பாரும்  வழங்கப்படுகிறது.


காஞ்சிபுரம் ஒன்றிய அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 98 பள்ளிகளில்  7819 மாணவ மற்றும் மாணவியர்களும்,  திருப்பெரும்புதூர் ஒன்றியத்தில் 105 பள்ளிகளில்  6442  மாணவ மற்றும் மாணவியர்களும், குன்றத்தூர் ஒன்றியத்தில் 90 பள்ளிகளில்  9643  மாணவ மற்றும் மாணவியர்களும்,   உத்திரமேரூர் ஒன்றியத்தில் 123 பள்ளிகளில் 5372  மாணவ மற்றும் மாணவியர்களும் மற்றும் வாலாஜாபாத் ஒன்றியத்தில் 111 பள்ளிகளில்  4957  மாணவ மற்றும் மாணவியர்களும்   இத்திட்டத்தினால் பயனடைந்து வருகின்றனர்.     


" 34,233 மாணாக்கர்கள் பயன் "       


தமிழ்நாட்டில் நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 31,000 அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரைபயிலும் 18.5 இலட்சம் மாணாக்கர்கள் இத்திட்டத்தினால் பயனடைகிறார்கள். புரட்சிகரமான இத்திட்டத்தினை ஏனைய பிற மாநிலங்கள் மட்டுமின்றி அயல்நாடு கனடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 527 பள்ளிகளில் 34,233 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர். 


நிம்மதியாக வேலைக்கு சென்று வர முடிகிறது


இதுகுறித்து காஞ்சிபுரம் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த லோகநாயகி தெரிவித்ததாவது : என் குழந்தைகள் ஆசிரியர் நகர் பள்ளியில் பயின்று வருகின்றனர். நானும், என் கணவரும் காலையில் வேலைக்கு செல்வதால் டிபன் செய்வதற்கு முடியாத சூழ்நிலை ஏற்படும். முதலமைச்சர் அறிமுகப்படுத்திய காலை உணவுத்திட்டத்தினால் என் பிள்ளைகள் பள்ளியில் காலை உணவு சாப்பிடுவதால் நாங்கள் நிம்மதியாக வேலைக்கு சென்று வர முடிகிறது. பெண்களுக்கு காலையில் உணவு செய்து குழந்தைகளை பள்ளி அனுப்புவதும் பிறகு நாங்கள் வேலைக்கு செல்வதும் மிகவும் சிரமமாக இருந்த சூழ்நிலையில், காலை உணவு திட்டத்தினால் பள்ளியில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவது எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளன. தினமும் மாணவர்களுக்கு சத்துள்ள உணவாக ரவா உப்புமா, மக்காச்சோளம் ரவா காய்கறி கிச்சடி போன்ற சத்தான உணவுகள் தரப்படுகின்றன. இத்திட்டத்தினை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்    என தெரிவித்தார்.