சென்னை குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிரிதரன்(34), குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா(30), இவர்களுக்கு திருமணம் ஆகி விஷாலினி(6), என்ற மகளும், சாய் சுதர்சன் என ஒரு வயதில் மகனும் உள்ளனர்.

Continues below advertisement

பாதிப்படைந்த குடும்பம்

இந்நிலையில் நேற்று காலை இவர்கள் நான்கு பேரும் வாந்தி மற்றும் வயிற்று வலியால் துடித்து அலறியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் அவர்கள் நான்கு பேரையும் மீட்டு கோவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மகள் விஷாலினி, மகன் சாய் சுதர்சன் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். 

Continues below advertisement

விசாரணையில் வெளிவந்த உண்மை

பின்னர் கணவன், மனைவி இருவரும் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் குன்றத்தூர் போலீசார் இறந்து போன பிள்ளைகள் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இதில் இவரது வீட்டில் எலிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் முதலில் கடையில் எலி மருந்து வாங்கி வைத்துள்ளார். அந்த மருந்தில் எலி அப்படியே ஒட்டி கொள்ளும் என்பதால் குழந்தைகள் கையை வைத்தால் பாதிப்பு ஏற்படும் . எனவே குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க , தான் பணிபுரியும் வங்கிக்கு மருந்து அடித்த நிறுவனத்தை ஆன்லைன் மூலம் எலி மருந்து அடிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

என்ன நடந்தது ?

இவரது வீட்டில் ஊழியர்கள் இரண்டு பேர் நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு வந்து வீடு முழுவதும் ஆங்காங்கே வெளி மருந்து வைத்து விட்டு சென்று விட்டனர். அதன் பிறகு அவர்கள் இரவு தூங்கிய நிலையில் இரவு முழுவதும் வீட்டிற்குள்ளேயே எலிமருந்து நெடி சுழன்று அடித்ததில் இவர்களுக்கு உடலுக்கு உபாதை ஏற்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது. மேலும் அளவுக்கு அதிகமான எலிமருந்தை ஊழியர்கள் வீட்டிற்குள் வைத்து விட்டு சென்றதாலேயே குழந்தைகள் இருவரும் இறந்து போனதும் கணவன் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

போலீசார் வழக்கு பதிவு

இதையடுத்து குன்றத்தூர் போலீசார் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து வீட்டிற்கு வந்து எலிமருந்து வைத்துவிட்டு சென்ற ஊழியர்கள் இருவரை கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடையில் வாங்கி வைக்கும் எலி பேஸ்ட்டை வைத்தால், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு வீட்டிற்கு எலி மருந்து வைத்த நிலையில், பிள்ளைகள் இருவரும் இறந்து போன நிலையில் கணவன் மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக குன்றத்தூர் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.