நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வழிசெய்யும் வகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்படும்


இந்த மசோதா சட்டமான பிறகு, சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும். எனினும் இதனால் மாநிலங்களில் பிரதிநிதித்துவம் பாழாகும் என்று மாநிலக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. 2014 முதல் பாஜக, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை முன்மொழிந்து வருகிறது. மக்களவை தேர்தல் அறிக்கையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது, பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். இதன்மூலம் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கலாம் என்னும் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடை இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.


காஞ்சிபுரத்தில் எச்.ராஜா


இந்தநிலையில் தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற வழக்கறித்தீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களே நெஞ்சுக்கு நீதி என்ற நெஞ்சுக்கு நிதி என்ற புத்தகத்தில் ஆதரித்து கூறியிருக்கிறார், ஆகையால் அப்பா பேச்சை கேட்காத பிள்ளையாக முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார்,


சி.எ.ஜி அறிக்கையின் படி 1185 கோடியில் ரூபாய் இந்துக்கள் கொடுத்த நன்கொடையில் தான் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, நன்கொடையை வைத்து கும்பாபிஷேகம் நடத்தி விட்டு பிறகு ஏன் முதலமைச்சர் வழிகாட்டுதலுடன் நடைபெறுவதாக கூறுகிறார். காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவரே தற்போது வரை மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறவில்லை என சட்டமன்றத்தில் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


இந்த அரசாங்கம் சென்னையை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது, இது தவறு என்று ஒரு மாதத்திற்கு முன்பே அரசாங்கத்திற்கு நான் எச்சரிக்கை விடுத்தேன், ஆகையால் உங்கள் சிந்தனையை சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களை கருத்தில் கொண்டு கண்காணிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.