வேலைவாய்ப்பு என்பது இளைஞர்களுக்கு மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு, படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் வேலை தேடி இளைஞர்கள், பல்வேறு நிறுவனங்களுக்கு அலையும் சூழல் இருந்து வருகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
களத்தில் இறங்கிய காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.,
தமிழ்நாடு அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து வந்தாலும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் செந்தமிழ் செல்வர் சி.வி.எம் அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்
வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 23.8.2025 சனிக்கிழமை நடைபெற உள்ளது. சனிக்கிழமை காலை 8:30 மணியிலிருந்து இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
கல்வித் தகுதி என்ன ?
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பி.டெக், பி.இ, எம்பிஏ, மற்றும் பிற டிகிரிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். ஆண்,பெண் என அனைத்து பாலினத்தவர்களும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு என்ன?
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் க்யூ.ஆர் ஸ்கேன் செய்து, நேரடியாக வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. qr மூலம் ஸ்கேன் செய்யவில்லை என்றாலும், நேரடியாகவும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தேவையான விபரங்கள் என்ன?
வேலைவாய்ப்பு முகாமிற்கு கலந்து கொள்ள விரும்புபவர்கள் சுயவிவரபடிவம் (Resume), பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சான்றிதழ் நகல்கள் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.