காஞ்சிபுரம் மாநகராட்சியில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்வதற்காக ஒன்பது லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தெரு நாய்களால் அவதிப்படும் பொதுமக்கள்
தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. உலக அளவில் தெரு நாய் கடியால் ஏற்படும், ராபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் இருந்து வருகிறது.
இந்தியாவில் தெரு நாய் கடிகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில், தமிழ்நாடு முதலிடம் இருப்பது தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. தெரு நாய் கடிகள் மூலம் ரேபிஸ் நோய் பரவுவதால், உயிரிழப்பு சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நாய்கள் தொல்லை
இதே நிலை காஞ்சிபுரம் மாநகராட்சிகளிலும் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம், பூக்கடைச்சத்திரம், வேதாச்சலம் நகர், பெரியார் நகர், டோல்கேட் பகுதி, ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு, நடுத்தெரு, காலண்டர் தெரு, பெரிய காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகே ஒரே நாய், 20-க்கும் மேற்பட்ட நபர்களை கடித்த சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தினமும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நாய் கடிக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பொதுமக்களின் கோரிக்கை என்ன ?
இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் சுற்றி தெரியும் நாய்களை, கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் உள்ள தெருநாய்களை கட்டுக்குள் கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் முடிவெடுத்தனர். அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் உள்ள தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக ஒன்பது லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் திட்டம் என்ன ?
முதற்கட்டமாக இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. இதேபோன்று கருத்தடை செய்து முடித்த பின்னர் தெரு நாய் எந்த இடத்தில், பிடிக்கப்படுகிறது அதே இடத்தில் கொண்டு வந்து விடப்படுகிறது. நாய் பிடிக்கும் வண்டி மூலம் நாய்கள் பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகள் அழைத்துச் செல்கின்றனர்.
இந்தப் பணிகள் தொடர்ந்து செய்து வந்தால், காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் நாய்களின் தொல்லை படிப்படியாக குறையும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருந்தும் உடனடியாக நாய்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.