கடந்த சில வாரங்களாக தமிழக தேர்தல்களம் அனல்பறந்து வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு பரப்புரை ஓய்ந்தது. அதனைத்தொடர்ந்து சில சலசலப்புகளுடன் அமைதியான முறையில் தமிழக தேர்தல் நடந்துமுடிந்தது. தமிழக தேர்தல் ஒருபக்கம் இருக்க ரசிகருக்கு படம்புகட்டிய தல அஜித்தும் சைக்கிளில் மாஸ் என்ட்ரி கொடுத்த தளபதியும் தான் 'டாக் ஆப் டவுன்' என்றால் அது மிகையல்ல. ஏற்கனவே லாக் டவுன் நேரத்தில் சைக்கிள்களின் மீதுள்ள ஆர்வம் மக்களுக்கு அதிகரித்திருந்த நிலையில் அதை இன்னும் அதிகப்படுத்தியுள்ளார் நடிகர் விஜய்.  




சரி நடிகர் விஜய் அப்படி என்ன வண்டியை தான் ஓட்டிட்டு வந்தாரு.. வாங்க பார்க்கலாம்.. 46 வயதாகும் தளபதி விஜய் பொதுவாகவே ஒரு பிட்னெஸ் பிரியர் என்பது எல்லாருக்கும் தெரியும். இந்நிலையில் அவர் நேற்று வாக்குச்சாவடிக்கு ஓட்டிவந்த சைக்கிளின் பெயர் 'மாண்ட்ரா மெட்டல்'. 27.5இன்ச் என்ற ரகத்தை சேர்ந்த இந்த வண்டியின் விலை சுமார் 22,500 ரூபாய். முழுக்க முழுக்க அலுமினியம் அல்லாய் கொண்டு உருவாக்கப்பட்ட வண்டி என்பதால் இது மிகவும் இலகுவான சைக்கிள் வகையை சார்ந்தது. 




கடந்த 2019ம் ஆண்டு வெளியான இந்த சைக்கிள் நியான் ரெட் வண்ணத்தைக்கொண்டது. பொதுவாக மலையேற்றத்திற்கு அதிகஅளவில் இந்த சைக்கிள் பயன்படுத்தப்படுவதாக சைக்கிள் பிரியர்கள் கூறுகின்றனர். இருப்பினும் குறுகிய தூரம் பயணம் செய்யவும் இதனை பயன்படுத்தலாம், நேற்று நடிகர் விஜய் பயன்படுத்தியதைப்போல. 27.5இன்ச் அகலம் டயர்கள் இருப்பதால் சாலையின் மீது அதிக கிரிப்புடன் செயல்பட உதவும். பைக்குகளில் பயன்படுத்தப்படும் மெக்கானிக்கல் டிஸ்க் பிரேக் கொண்ட இந்த சைக்கிளில் முன்புறம் 3 கியர்களும் பின்புறம் 8 கியர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.