புத்தாண்டு முதல் நாள் மாலையான நேற்று Zomato தலைமை நிர்வாக அலுவலர் தீபிந்தர் கோயல் தனது அலுவலகப் பணியை விடுத்து உணவு டெலிவரி செய்ய கிளம்பிய செயல் கவனமீர்த்து பேசுபொருளாகியுள்ளது.


புத்தாண்டு பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி பரபரப்பாக இருக்குமோ, இல்லையோ, டிசம்பர் 31ஆம் தேதி மாலை உச்சக்கட்ட பரபரப்பில் இருக்கும்.


அதிலும் ஆன்லைன் உணவு விநியோக சேவைகள் எழுச்சி பெற்றது முதல் ஆண்டுதோறும் டிச.31ஆம் தேதிகளில் ஆன்லைன் உணவு ஆர்டர்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்த வண்ணம் உள்ளது.


அந்த வகையில் நேற்றைய புத்தாண்டு முதல் நாள் இரவு உணவு விநியோக சேவைகளுக்கான தேவை அதிகரித்த நிலையில், Zomato தலைமை நிர்வாக அலுவலர் தீபிந்தர் கோயல் தனது அலுவலகப் பணியை விடுத்து உணவு டெலிவரி செய்ய கிளம்பிய செயல் கவனமீர்த்து பேசுபொருளாகியுள்ளது.


"இப்போது நான் சொந்தமாக இரண்டு ஆர்டர்களை டெலிவரி செய்யப் போகிறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் திரும்பி வருவேன்" என்று தீபிந்தர் கோயல் நேற்று (டிச.31) மாலை தன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு டெலிவரிக்கு புறப்பட்டார்.


சிவப்பு Zomato சீருடையில் கையில் இரண்டு உணவுப் பெட்டிகளுடன் தன் புகைப்படம் ஒன்றையும் தீபிந்தர் பகிர்ந்திருந்த நிலையில், அவரது இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானது.


 






Zomato CEO உணவு ஆர்டர்களை வழங்குவது இது முதன்முறை அல்ல. கடந்த அக்டோபர் மாதம் தீபிந்தர் கோயலுடன் உடனான ட்விட்டர் உரையாடல் ஒன்றில் பங்கேற்ற Naukri தளத்தின் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனி, சொமேட்டோ நிறுவனத்தின் சீருடையான சிவப்பு சட்டை அணிந்து உயர் பதவிகளில் இருப்பவர்களும் டெலிவரி பணிகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்திருந்தார்.


"இப்போதுதான் @deepigoyal மற்றும் @zomato குழுவைச் சந்தித்தோம். தீபிந்தர் உட்பட அனைத்து மூத்த மேலாளர்களும், சிவப்பு நிற Zomato டீசர்ட் அணிந்து, மோட்டார் சைக்கிளில் ஏறி, காலாண்டுக்கு ஒரு முறையாவது ஆர்டர்களை டெலிவரி செய்வதில் ஒரு நாளைக் கழிப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். தீபிந்தர இதுவரை யாரும் அடையாளம் கண்டுகொண்டதில்லை என என்னிடம் தெரிவித்தார்" என்று பிக்சந்தனி முன்னதாக ட்வீட் செய்திருந்தார்.


இந்த ட்வீட்டும் இணையத்தில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.