Yuzvendra Chahal: இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் விவாகரத்து பெற உள்ளதாக கூறப்படும் நிலையில், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யுஸ்வேந்திரா சாஹல் போட்ட பதிவு:
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல், தனது மனைவி தனஸ்ரீ வர்மாவிடமிருந்து விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் பல மாதங்களாகவே பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சாஹல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில், “கடின உழைப்பு மக்களின் குணாதிசயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உங்கள் பயணம் உங்களுக்குத் தெரியும். உங்கள் வலிகள் உங்களுக்குத் தெரியும். இங்கு வருவதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உலகுக்குத் தெரியும். நீங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறீர்கள். உங்கள் வியர்வை சிந்தி உழைத்தீர்கள். உங்கள் தந்தையையும் தாயையும் பெருமைப்படுத்துங்கள், எப்போதும் ஒரு பெருமைமிக்க மகனைப் போல நிமிர்ந்து நிற்கவும்” என சாஹல் குறிப்பிட்டுள்ளார். இந்த உணர்ச்சிகரமான பதிவு விவாகரத்து செய்திகளுக்கு மத்தியில் வெளியாகி, ஊகங்களை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சாஹலும் தனஸ்ரீயும் பிரிந்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாஹல் - தனஸ்ரீ விவாகரத்து:
சாஹல் மற்றும் தனஸ்ரீ இருவரும் டிசம்பர் 2020 இல் குர்கானில், குடும்பத்தினர் சூழ திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் காதல் கதை கொரோனா தொற்றின் போது தொடங்கியது. பல் மருத்துவராக இருந்தபோதும், நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் நடனப்பள்ளி ஒன்றையும் தனஸ்ரீ நடத்தி வருகிறார். அதுதொடர்பான வீடியோக்களை கண்டு, நடனம் பயில சென்றபோது சாஹல் மற்றும் தனஸ்ரீ இடையே காதல் மலர்ந்தது. குறைந்த காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இந்த ஜோடி, சமூக வலைதளங்களிலும் தீவிரமாக செயல்பட்டு கவனத்தை ஈர்த்தது. இந்த சூழலில் தான், இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்துள்ளனர். மேலும், சாஹல் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் இருந்து டெலிட் செய்துள்ளார். இதனால், இருவரும் விவாகரத்து பெறுவது உறுதி என கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த 2023ம் ஆண்டும் இந்த ஜோடி பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இன்ஸ்டாகிராமில் தனது பெயரிலிருந்து சாஹல் என்பதை நீக்கினார். ஆனால், அந்த வதந்திகளை நிராகரித்த சாஹல், சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என்று ரசிகர்களை வலியுறுத்தினார்.
சொத்து மதிப்பு:
மாடல், பல் மருத்துவர் மற்றும் நடன ஆசிரியராக உள்ள தனஸ்ரீ வர்மாவின் சொத்து மதிப்பு சுமார் 24 கோடி என கூறப்படுகிறது. அதேநேரம், ஐபிஎல் உள்ளிட்டவை மூலம் ஆண்டுக்கு சுமார் 7 முதல் 9 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும், சாஹலின் சொத்து மதிப்பு சுமார் 70 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.