ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையேயான மோதல் வன்முறையாக வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. 


ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் ஆகியோருக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் தொகுதி எம்.எல்.ஏ., வல்லபனேனி வம்சி கடுமையான கருத்துகளால் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திமடைந்த தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 






இந்த கருத்து மோதல்  கன்னவரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் , தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களிடையே வன்முறையாக வெடித்தது. அங்குள்ள தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதோடு அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை எம்.எல்.ஏ. வம்சியின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி தீ வைத்து கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. 


இதனையடுத்து சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் திரண்ட தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி கட்சி தொண்டர்கள்  ஒருவரையொருவர் தடி மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.  இந்த சம்பவத்தால்  நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. 


இதனிடையே தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான தேவிநேனி உமாமகேஸ்வர ராவ் மற்றும் செய்தித் தொடர்பாளர்  பட்டாபிராம் ஆகியோர் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க கன்னவரம் சென்ற நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.


கன்னவரம் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதையும், கட்சி வாகனங்களுக்கு தீ வைத்ததையும் வன்மையாக கண்டித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு  நாயுடு, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு  நிச்சயமாக பதிலளிப்பார் என்றும், இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும்போது போலீசார் என்ன செய்கிறார்கள் என்றும் சரமாரியாக விமர்சித்துள்ளார்.


அதேசமயம் 2019 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பாக கன்னவேரம் தொகுதியில் இருந்து வம்சி சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மாறிய நிலையில், தற்போது அவர் தெலுங்கு தேசம் கட்சியை சரமாரியாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.