கொரோனா வைரஸா அது எங்கோ, யாருக்கோ வருகிறது என்றுதான் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரையில் கூட இந்தியர்கள் பலர் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று அந்தநோய் யாரையும் விட்டுவைப்பதாக இல்லை. அதற்கு வயது பேதமில்லை. அது, இனம் மதம் பாரபட்சமில்லை. ஏழை, பணக்காரர் அந்தஸ்தையும் பார்ப்பதில்லை. முகக்கவசம் அணியாவிட்டால், சமூக விலகலை கடைபிடிக்காவிட்டால் போதும் யாரையும் பதம் பார்த்துவிடுகிறது கொரோனா வைரஸ்.

 

இந்த கொடிய கொரோனா வைரஸ் காவுகொண்ட பிரபலங்களின் பட்டியல் பெரியது. அதில், கடைசியாக டெல்லியைச் சேர்ந்த மேடை நாடக நடிகரும், யூடியூப் வீடியோ பிரபலமுமான ராகுல் வோராவின் உயிரைப் பறித்திருக்கிறது. 35 வயதில் உயிரைத் துறந்துள்ள ராகுல் வோரா தன் மறைவுக்கு சில மணிநேரத்துக்கு முன்னதாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்த போஸ்ட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

 


 

அந்தப் போஸ்டில் அவர் பிரதமர் மோடியையும், டெல்லி அமைச்சர் மனிஷ் சிசோடியாவையும் டேக் செய்திருக்கிறார். அந்த பதிவில் அவர், "எனக்கு மட்டும் சரியான நேரத்தில் நல்லவகையில் மருத்துவம் பார்க்கப்பட்டிருந்தால் நான் நிச்சயம் பிழைத்துவிடுவேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு முன்பு, எங்காவது ஒரு மருத்துவமனை ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதியுடன் என்னை அனுமதிக்கத் தயாராக இருக்கிறதா? என்று ஏக்கத்துடன் பதிவிட்டிருந்தார். ஒரு கட்டத்தில் எல்லா நம்பிக்கையும் வடிந்துபோனவராக, "மீண்டும் ஜென்மம் எடுத்து வருவேன். அப்போதும் நிறைய நல்லது செய்வேன். இப்போது நம்பிக்கையை இழந்துவிட்டேன்" எனப் பதிவிட்டிருந்தார்.

 

ராகுல் வோராவைப் போல் பலரும் தங்களின் இன்னுயிர் தொலைக்கும் காலமாக இந்த கொரோனா காலம் இருக்கிறது. ராகுல் வோரா டெல்லியில் இயங்கும் அஸ்மிதா என்ற நாடகக்குழுவைச் சேர்ந்த பிரபல நடிகர். அதுவே அவரின் முதல் மேடை. அஸ்மிதா அளித்த புகழின் வாயிலாகவே அவர் யூடியூபிலும் பிரபலமானார்.

 


 

அஸ்மிதாவின் இயக்குநர் அர்விந்த் கவுர் கூறும்போது, "ராகுல் எங்களுடன் இணைந்து 6 வருடங்கள்தான் ஆகின்றன. இந்த ஆறு ஆண்டு காலத்தில் பற்பல கதாபாத்திரங்களில் நடித்துவிட்டார். ஒவ்வொன்றிலும் தனித்துவமாகப் பளிச்சிடுவார். கிரிஷ் கர்னாடின் ரக்த் கல்யாண் நாடகத்தில் அவரின் நடிப்பு மறக்க முடியாதது. ராகுல் எப்போதுமே நேர்மறையான சிந்தனை கொண்டவர். அவரை இழந்துவிட்டேன். அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றியும் காப்பாற்ற முடியவில்லை. ராகுல், எங்களை மன்னித்துவிடவும். உங்களின் மரணத்தில் நாங்கள் ஒவ்வொருவருமே குற்றவாளிகள்தான். கடைசி மரியாதையை உரித்தாக்குகிறேன்" என்று கூறியுள்ளார்.

 

தலைநகர் டெல்லியில் வரும் 17-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க இந்த ஊரடங்கு உதவுவதாக முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். அங்கு ஆக்சிஜன் சர்ச்சை ஓரளவு குறைந்திருந்தாலும் கூட மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்தச் சூழலில் குடிமக்கள் அனைவருமே பெருந்தொற்று நெருக்கடியை முழுமையாக உணர்ந்து தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருப்போம். வெளியில் சென்றால் முகக்கவசம் அணிவோம். அடிக்கடி கைகளை சுத்தம் செய்வோம். சமூக இடைவெளியைத் தவறாமல் கடைபிடிப்போம்.