பிரதமர் மோடி, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அரசு அமைப்புகள் பற்றி பொய் தகவல்களை பரப்பிய யூடியூப் சேனல்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


33 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்ட 3 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. News Headlines, Sarkari Update and Aaj Tak Live ஆகிய யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "செய்திகளை கொண்டு சேர்க்கும் மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் பொய் தகவல்களை களையும் பிரிவு 3 யூடியூப் சேனல்களுக்கு எதிராக விசாரணை நடத்தியது.


 






இந்த பிரிவு 40 க்கும் மேற்பட்ட உண்மை கண்டறியும் சோதனைகளை நடத்தியது. பிரதமர், தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தேர்தல் முறை குறித்து தவறான தகவல்களை பரப்பும் பல வீடியோக்கள் கண்டறியப்பட்டன. இந்த வீடியோக்கள் 30 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.


வாக்குச் சீட்டு முறை மூலம் எதிர்காலத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும், வங்கிக் கணக்கு அல்லது ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் அரசாங்கம் பணம் விநியோகம் செய்வதாக அவர்கள் பொய் செய்திகளை பரப்பியுள்ளனர்.


இந்த யூடியூப் சேனல்கள், டிவி சேனல்களின் லோகோக்கள் மற்றும் முக்கிய செய்தி தொகுப்பாளர்களின் படங்களைப் பயன்படுத்தி தவறான செய்திகளை உண்மை செய்திகளாக பரப்பி மக்களை நம்ப வைத்தது கண்டறியப்பட்டது.


இந்த சேனல்கள் தங்கள் வீடியோக்களில் விளம்பரங்களைக் காட்டியும் தவறான தகவல்களைப் பரப்பியும் யூடியூப்பில் பணம் சம்பாதித்தது கண்டறியப்பட்டது. 


 






தவறான தகவல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஒரு வருடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் முடக்கப்பட்டுள்ளன.