முகமது நபிகள் குறித்து பாஜக தலைவர் நுபுர் சர்மா தெரிவித்த கருத்து உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, அரபு நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதை தொடர்ந்து, நுபுர் சர்மாவை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் ஒருவரின் தலையை வெட்டி கும்பல் ஒன்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மருந்தாளர் உமேஷ் கோலி மர்மமான முறையில்  கொலை செய்யப்பட்டார்.


ஆனால், அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. பின்னர், விசாரணையில் அவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டது தெரியவந்தது. எனவே, இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரோ என சந்தேகம் எழுந்தது.


இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) விசாரணை மாற்றப்பட்டது. இந்நிலையில், உமேஷ் கோலி கொலை குறித்து என்ஐஏ தாக்கல் செய்ய குற்றப்பத்திரிகையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


முகமது நபியின் அவமதிப்புக்கு பழிவாங்குவதற்காக தப்லிகி ஜமாத்தின் தீவிர இஸ்லாமியர்களால் அவர் கொலை செய்யப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த கொலை சம்பவத்தை தீவிரவாத கும்பலின் பயங்கரவாதச் செயல் என்று கூறிய என்ஐஏ, மத உணர்வுகளை புண்படுத்தினால் இப்படிதான் நடக்கும் என்பதை காட்டுவதற்காக அவர்கள் கொலை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளது.


இந்த கொலையானது பொது அமைதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு" மற்றும் அமராவதியில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசத்தின் பொது மக்களின் பாதுகாப்பையும் சீர்குலைத்துள்ளது என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது.


குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.






இந்திய தண்டனைச் சட்டம் 120பி (குற்றச் சதி), 302 (கொலை), 153 ஏ (பகைமையை ஊக்குவித்தல்), 201 (ஆதாரம் காணாமல் போனது), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 


எந்த வித சொத்து தகராறும், யாருடனும் உமேஷ் சண்டையிட்டதில்லை என குறிப்பிட்டுள்ள என்ஐஏ. இதனை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரை கொலை செய்ய குற்றம்சாட்டப்பட்டவர்கள் சதி திட்டம் தீட்டியதாத தெரிவித்துள்ளது.


குற்றம் சாட்டப்பட்டவர்கள், நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ்அப் பதிவை வெளியிட்ட உமேஷை பழிவாங்குவதற்காக தீவிரவாத கும்பலை ஒன்று சேர்த்துள்ளனர்.