தெலங்கானா மாநிலத்தில் இன்சூரன்ஸ் பணத்திற்காக சொந்த அண்ணனையே லாரி ஏற்றி தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் வெளியான தகவலின்படி, ‘இந்த சம்பவத்தை தெலங்கானா மாநிலம் கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள ராமதுகு கிராமத்தைச் சேர்ந்த மாமிடி நரேஷ் என்பவர் செய்துள்ளார். அவருக்கு கிட்டத்தட்ட ரூ.1.5 கோடி கடன் இருந்துள்ளது. முதலீடு, அதிக லாபம் பெறலாம் என்ற ஆசையில் பணம் அனைத்தையும் இழந்துள்ளார். இவ்வளவு பெரிய கடனை அடைக்க முடியாததால், நரேஷ் என்ன செய்யலாம் என விழி பிதுங்கி வந்தார். அப்போது அவரது சகோதரரான 37 வயதுடைய மாமிடி வெங்கடேஷை தனது திட்டத்துக்கு பயன்படுத்திக் கொண்டார். 

திருமணமாகாத மற்றும்  மன வளர்ச்சியில்லாத மாமிடி வெங்கடேஷ் பெயரில் கிட்டத்தட்ட ரூ.4.14 கோடி மதிப்புள்ள பல உயர் மதிப்புள்ள இன்சூரன்ஸ் எடுக்க முடிவு செய்தார். பின்னர் தனது திட்டப்படி அவரைக் கொன்று அந்த இன்சூரன்ஸ் காப்பீட்டு தொகையை பெற வேண்டும் என கொடூரமாக திட்டமிட்டுள்ளார். 

Continues below advertisement

இதனைத் தொடர்ந்து நரேஷ், அவரது நண்பர் நமுண்ட்லா ராகேஷ் மற்றும் டிப்பர் லாரி டிரைவர் முனிகலா பிரதீப் ஆகியோருடன் சேர்ந்து கொலையை நிகழ்த்த முடிவு செய்து விரிவான திட்டத்தைத் தயார் செய்தார். அவர்களின் திட்டமிடலின்போது நடந்த விவாதங்களை ​​ராகேஷ் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து சேமித்து வைத்திருந்தார். இதற்கிடையில், நரேஷ் ஒரு வங்கியில் இருந்து ரூ.20 லட்சம் தங்கக் கடனைப் பெற்றார்.

மாமிடி நரேஷ் திட்டத்தின்படி, கடந்த நவம்பர் 29 அன்று மாமிடி வெங்கடேஷ் லாரி ஏற்றி கொல்லப்பட்டார்.  டிப்பர் லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வெங்கடேஷ் ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக குடும்பத்தினருக்கும் போலீசாருக்கும் மாமிடி நரேஷ் தகவல் கொடுத்தார்.  சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து வெங்கடேஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, ​​மாமிடி வெங்கடேஷின் மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்தது. 

அதாவது வெங்கடேஷ் இறந்து விட்டதாக கூறி காப்பீட்டு பணம் கேட்டு நரேஷ் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நாடியுள்ளார். அவர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னுக்குப் பின்  அவர் பதில் சொல்ல, சந்தேகமடைந்த அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க 3 பேரும் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராகேஷூக்கு கிடைக்கும் பணத்தில் ரூ.7 லட்சமும், டிப்பர் லாரி டிரைவருக்கு ரூ.2 லட்சமும் பணம் பேரம் பேசப்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்த நாளில் டிப்பர் லாரி பழுதடைந்துவிட்டது, வா பார்த்து விட்டு வரலாம் என பிரதீப் வெங்கடேஷை கிராமத்தின் புறநகர்ப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். வெங்கடேஷ் வந்ததும், நரேஷ் டிப்பர் லாரியை சரிசெய்வது போல் நடித்து வாகனத்தின் அடியில் அவரைப் படுக்க கட்டாயப்படுத்தியுள்ளார். பின்னர் திட்டப்படி டிப்பர் லாரியை இயக்கி, வெங்கடேஷை கொலை செய்துள்ளனர்.