Yogi Adityanath : நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி
சுதந்திர தினவிழா கொண்டாடத்தின் ஒரு அங்கம் ஆக ’காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி இன்று உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கப்பட உள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான அறிவுப் பிணைப்பு மற்றும் பண்டைய நாகரிக தொடர்பை மீண்டும் கண்டறியும் வகையில் வாரணாசியில் இன்று முதல் டிசம்பர் 17 ஆம் தேதி வரை ஒரு மாத காலம் ’காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் பழங்கால நூல்கள், இலக்கியம், கைத்தறி, கைவினை, தத்துவம், ஆன்மீகம், இசை, நாடகம், நடனம், யோகா, ஆயுர்வேதம், நவீன கண்டுபிடிப்புகள் போன்ற அம்சங்கள் இடம்பெறுகின்றன. இதுமட்டுமின்றி கருத்தரங்கங்கள், விவாதங்கள், விரிவுரைகள் போன்றவையும் இந்நிகழ்சியில் நடைபெற உள்ளது.தமிழகத்தின் பாரம்பரிய கலை, கலாச்சாரம், உணவு வகைகள், கைத்தறி கைவினை பொருட்கள் ஆகியவை அடங்கிய பொருட்காட்சியும் இருக்கும். மேலும், பரதநாட்டியம், கர்நாடக இசை, தமிழ் இசை, தமிழ் நாட்டுப்புற இசை, நாதஸ்வர கச்சேரி போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
சிறப்பு ரயில்
காசியில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியல் கலந்து கொள்வதற்கு தமிழகத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், இசை, நடனம், நாட்டுப்புற கலை, ஆயுர்வேதம் சார்ந்த கலாச்சார வல்லுநர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். ஒரு மாத காலம் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக இந்திய ரயில்வே தமிழ்நாட்டிலிருந்து உத்தரபிரதேச மாநிலம் காசிக்கு மொத்தம் 13 ரயில்களை இயக்கப்படுகிறது.
இன்று பயணம்
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து வாரணாசிக்கு இன்று ஒரு குழு ரயில் மூலம் செல்கிறது. 216 பேர் இந்த குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர். அதில் ராமேஸ்வரத்தில் இருந்து 35 பேரும், திருச்சியில் இருந்து 103 பேரும், சென்னையில் இருந்து 78 பேரும் பயணம் செய்கின்றனர். இந்த குழுவை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அனுப்பி வைக்கிறார்.
”ஆன்மீகம், தத்துவ மரபு ஒன்றுதான்”
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி குறித்து உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ” காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான். 'காசி தமிழ் சங்கமம்' ஆனது இந்த ஒன்றுபட்ட நிலையின் புனிதமான மற்றும் வளமான உணர்வை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான ஊடகம்" என்று தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்வு இந்தியாவின் கலாச்சார நாகரிகத்தில் 'ராம சேது' போலவே இருக்கும். பாபா விஸ்வநாதரின் புண்ணிய ஸ்தலத்தில் 'காசி-தமிழ் சங்கமம்' விழாவிற்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும்/ பிரமுகர்களுக்கும் அன்பான வரவேற்பு.
இந்த விழா மரியாதைக்குரிய பிரதமரின் 'ஏக் பாரத்-ஷ்ரேஷ்டா பாரத்' உறுதிமொழிக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும் என்றும் அன்பென்ற உணர்வு இழைகளினால் இந்தியா முழுவதையும் பிணைத்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வரவேற்பு” என தெரிவித்துள்ளார்.