மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரமே இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் சோகமும், வருத்தமும் இன்னும் முழுமையாக மறையாத சூழலில் ஹரியானா கலவர பூமியாக வெடித்திருப்பது அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது.


ஹரியானா கலவரம்:


ஹரியானாவின் முக்கிய நகரமான குருகிராம் அருகே உள்ள நூஹ் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா என்ற பிரம்மாண்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டது. அந்த பேரணியை அந்த பகுதி பா.ஜ.க. தலைவர் தொடங்கி வைத்தார். இந்த பேரணி கேத்லா மோட் அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு தரப்பினருக்கும், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.




இந்த மோதல் பெரும் கலவரமாக மாற அதைக்கட்டுப்படுத்த போலீசார் தடியடி, கண்ணீர்புகைக்குண்டு வீசினர். இதனால், மேலும் பதற்றம் அதிகரித்து இந்த கலவரம் குர்கான், பல்வால், பரிதாபாத் என பல மாவட்டங்களுக்கு பரவியது. இதனால், ஒட்டுமொத்த ஹரியானாவும் பதற்றமான சூழலுக்கு ஆளானது. இதையடுத்து, பல பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






கலவரத்திற்கு காரணம் இதுதான்:


இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஹரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சௌதாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிதாவது, விஷ்வ இந்து பரிஷத் நடத்திய இந்த பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா பற்றிய முழுமையான தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள் தரவில்லை. யார்? யார்? பங்கேற்கின்றனர் என்ற தகவல்களும் அவர்கள் தரவில்லை. இதன் காரணமாக, நூஹ் மாவட்டத்தில் வன்முறை வெடித்தது. கடந்த காலத்தில் இதுபோன்ற சம்பவம் எதுவும் மாநிலத்தில் நடக்கவில்லை. சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”  இவ்வாறு அவர் கூறினார்.




இந்த கொடூர வன்முறை சம்பவத்தின் காரணமாக இதுவரை 4 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் ஏற்படாமல் தடுக்கும் விதத்தில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், குருகிராம் பகுதியில் உள்ள பிரபல மசூதியை தீ வைத்து கலவரக்கும்பல் எரித்துள்ளது. மேலும், மசூதியின் இமாமையும் அவர்கள் சுட்டுக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.


இந்த கலவர சம்பவத்திற்கு பஜ்ரங்தள பிரமுகர் மோனு மானேசர் முக்கிய காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கலவர சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.