மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இன்று, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாக (யாஸ் புயல்) வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வடக்கு ஓடிஸா - பங்களாதேஷ் கரையை வரும் 26-ஆம் தேதி கடக்கும் என்று இந்திய தேசிய வானிலை மையம் தெரிவித்தது.
இதற்கிடையே, வங்க கடலில் உருவாகும் யாஸ் புயலை எதிர்கொள்வதற்கான மத்திய மாநில அரசுத் துறைகளின் ஆயத்தம் குறித்து, மத்திய அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கவுபா தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை குழு முக்கிய ஆலோசனை நடத்தியது.
யாஸ் புயல்:
அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கடந்த 18-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. இதன் காரணமாக மேற்கு கடலோர பகுதிகளில் அனைத்து இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளா பகுதிகளிலும் மழை அதிகமாக பதிவாகி , சேதத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மையம் நாளை புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடையில் தவித்த வந்த சென்னை மக்களுக்கு இந்த மழை சற்று மகிழ்ச்சியை தந்துள்ளது. எனினும் இன்று உடன் இந்த மழை குறைந்து மீண்டும் வெப்பம் அதிகரிக்க கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் போது சென்னையில் படி படியாக மழை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலுக்கு ஓமன் நாடு கொடுத்த 'யாஸ்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரும் 26ஆம் தேதி இந்தப் புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் மாநில கடற்பகுதிகளில் கரையை கடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒடிசாவில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. புயலுக்கு முன்பாக எடுக்கப்படும் ஆயத்த பணிகளை ஒடிசா அரசு தீவிர படுத்தியுள்ளது. அதன் ஒருபகுதியாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணிகளை ஒடிசா அரசு செய்து வருகிறது.
இந்தாண்டு டவ்தே புயலுக்கு பிறகு வரும் இரண்டாவது புயல் யாஸ் ஆகும். மேலும் வங்கக்கடலில் உருவாகும் முதல் புயல் இதுவாகும். அடுத்த சில நாட்களுக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் பகுதிகள் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் மீன்வர்கள் வரும் 26 தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ஒடிசா மட்டுமல்லாமல் மேற்கு வங்கம், அதே போல ஆந்திராவை ஒட்டிய எல்லை பகுதியில் உள்ள கடலோர பகுதிகளின் மீனவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான யாஸ் புயலால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனிடையே வெப்பசலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு 18 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.