இந்தியாவில் மிகப் பெரிய இரு தேசிய கட்சிகள் என்றால் அது காங்கிரஸ் மற்றும் பாஜக. கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக இந்தியாவில் ஆட்சி செய்து வருகிறது. பாஜக 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சிக்கு நன்கொடை மற்றும் நிதி அதிகமாகி வருவதாக பல செய்திகள் வெளியாகி வந்தன. அதேபோல 2014ஆம் ஆண்டிற்கு பாஜகவிற்கு நிதி வருகை பல மடங்கு அதிகரித்தது. குறிப்பாக கட்சிகளுக்கு நிதியளிக்க 2017ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் என்ற முறையை பாஜக அரசு அறிமுகம் செய்தது. இந்த முறைக்கு பிறகு பாஜக அதிகளவில் பயன் அடைந்ததாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. 


இந்நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் பாஜகவின் வங்கி கணக்கில் இருந்த பணம் இக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதன்படி 2020ஆம் ஆண்டு இறுதியில் பாஜக வங்கி கணக்கில் 2,253 கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு 2400 கோடியை தாண்டி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




இந்த பணத்துடன் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை ஒப்பிட்டு பார்த்தால் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. 2020ஆம் ஆண்டின் இறுதியில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் 178 கோடி ரூபாய் பணம் மட்டுமே இருந்ததுள்ளது தெரியவந்துள்ளது. ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் வந்துள்ள நன்கொடை நிதி வித்தியாசம் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. 


தேர்தல் பத்திரங்கள் முறையில் யார் எந்த கட்சிக்கு பணம் அளித்தார் என்பது அரசு மட்டும் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு பெரியளவில் நிதி செல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக பாஜகவிற்கு வரும் நிதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய கட்சிகளுக்கு மட்டுமல்லாது மாநில கட்சிகளும் இது போன்ற நிதியை பெற்றுள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு மாநில கட்சிகளும் தங்களின் நிதி வருவாயை பெருக்கியுள்ளனர். கட்சி தொடர்பான பணிகள், செலவுகள், தேர்தல் செலவுகள் என பல்வேறு பணிகளுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படுகிறது. முறையான கணக்க கட்டப்படும் தொகை என்றாலும் இந்த அளவிற்கு கட்சிகள் நிதி திரட்டுவது சமீபமாக அதிகரித்து வருகிறது. 




பொதுவாக நிதியளிப்பவர்கள் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என பாகுபாடு காட்டியே நிதி அளிப்பர். அந்த வகையில் மத்தியில் ஆளும் கட்சி என்கிற முறையில் பாஜகவிற்கு அதிக நிதி கிடைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் மாநிலத்தில் பல இடங்களில் ஆட்சியை இழந்ததாலும், மத்தியில் இரண்டாவது முறை ஆட்சியை இழந்ததாலும் காங்கிரஸ் கட்சிக்கான நிதி வருவாய் குறைந்திருப்பதாகவும், அதனால் தான் அக்கட்சியின் வங்கி இருப்பு குறைவாக காணப்படுவதாகவும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.