பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் குறித்து சர்வதேச மல்யுத்த நடுவர் இன்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்களை, டெல்லி காவல்துறையின் சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது.


200 பேரிடம் வாக்குமூலம் பெற்ற டெல்லி காவல்துறை:


டெல்லி காவல்துறை, இதுவரை, 200க்கும் மேற்பட்டோரிடன் வாக்குமூலத்தை பெற்றுள்ளது. அந்த வகையில், கடந்த மே 20ஆம் தேதி, சர்வதேச மல்யுத்த நடுவர் ஜக்பீர் சிங்கின் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்களை ஜக்பீர் சிங் பகிர்ந்துள்ளார். கடந்தாண்டு மார்ச் மாதம், லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொடக்கூடாத இடத்தில் தொட்டு பிரிஜ் பூஷன் அமுக்கியதாக ஜக்பீர் சிங் தெரிவித்துள்ளார்.


கடந்தாண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி, ஆசிய சாம்பியன்ஷிப் (சீனியர்) போட்டியின் பயற்சி ஆட்டத்திற்கு பிறகு புகைப்பட அமர்வு நடைபெற்றது. அப்போது, தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் ஏழு பேர் புகார் அளித்தனர். 


"மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளருடன் வழக்கமான புகைப்படம் எடுக்க வீராங்கனைகள் மேடையில் கூடியிருந்தனர். அப்போது, வீராங்கனையின் பிட்டத்தில் (buttock) அவரின் அனுமதி இன்றி பிரிஜ் பூஷன் கை வைத்தார். இது,மிகவும் அநாகரீகமானது மற்றும் ஆட்சேபனைக்குரியது என வீராங்கனை தெரிவித்துள்ளார்.


அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட சர்வதேச நடுவர்:


பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிறகு விலகிச் செல்ல முயன்றேன். ஆனால், எனது தோளை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தார் என்றும் வீராங்கனை கூறியுள்ளார்" என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த குறிப்பிட்ட சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறிய சர்வதேச நடுவர் ஜக்பீர் சிங், "பிரிஜ் பூஷன் சிங் அதைச் செய்வதை நான் பார்த்தேன். அதன்பிறகு படபடப்புடன் காணப்பட்ட வீராங்கனை புகைப்படம் எடுக்க விரும்பவில்லை என்று கூறி கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார்" என்றார்.


லக்னோ நிகழ்ச்சியில் நடைபெற்ற சம்பவம் குறித்து மட்டுமே ஜக்பீர் சிங்கிடம் டெல்லி காவல்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது. ஆனால், பிரிஜ் பூஷன் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களை, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜக்பீர் சிங் போட்டு உடைத்துள்ளார்.


கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிஜ் பூஷன் சிங்கின் பயங்கரமான முகத்தை பார்த்ததாக கூறியுள்ள ஜக்பீர் சிங், "தாய்லாந்தில் நடைபெற்ற போட்டியின் இரவு உணவு நிகழ்ச்சியின் போது, ​​குடிபோதையில் வீராங்கனைகளை பிரிஜ் பூஷன் சிங் மானபங்கம் செய்தார். அவரது காட்டுமிராண்டித்தனம் தாங்க முடியாத ஒன்றாக இருந்தது.


பிரிஜ் பூஷன் சிங்கும் அவரது உதவியாளர்களும் குடிபோதையில் மல்யுத்த வீரர்களை தகாத முறையில் தொடவும், வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்கவும் செய்தனர். சில வீராங்கனைகள் இரவு உணவையும் விட்டுவிட்டு சென்றனர்" என்றார்.