பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் லோகோ பைலட்கள் பணியின்போது ‘ஸ்மார்ட் வாட்ச்’ அணிய இந்திய ரயில்வே வாரியம் தடை விதித்துள்ளது. 


ஷாலிமார்- சென்னை கோடமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் தரம் புரண்டு விபத்துக்குள்ளானதில்  288 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாகவும் கூறப்பட்டது. இந்த மிகப்பெரிய பேரழிவுக்கு பிறகு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது இந்திய ரயில்வே. 


மொபைல் போன்களை பயன்படுத்துவது ஏற்கனவே தடை செய்யப்பட்ட நிலையில், அதற்கு மாறாக லோகோ பைலட்கள் ஸ்மார்ட் வாட்ச்களை பரவலாக பயன்படுத்து வந்தனர். இந்த ஸ்மார்ட் வாட்சுகள் மூலம் அவர்கள் தங்களது உடல்நிலை பராமரிப்புகளையும், புளூடூத் தொழில்நுட்பத்தில் மொபைல் போனுடன் ஸ்மார்ட் வாட்ச்சை இணைத்து போன் பேசும் வசதியும் உள்ளது. 


இதையடுத்து, இனி ரயில்கலை இயக்கும் லோகோ பைலட்கள் பணியின்போது செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன் ஆப் செய்யப்பட்டுள்ளதா என்ற சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், ஆஃப் செய்யப்பட்ட செல்போன்கள் அருகில் வைத்திருக்கவும் தடை விதித்துள்ளது இந்திய ரயில்வே. 


இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ சமீபத்தில் பணியில் இருந்த ஒரு லோகோ பைலட் 110 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கி கொண்டிருக்கும்போது தனது கையில் இருந்த ஸ்மார்ட்வாட்சை அடிக்கடி பார்த்து கொண்டிருந்தார். அந்த ஸ்மார்ட் வாட்சானது அடிக்கடி ஆன் ஆனது, இதனால் கவன சிதறல் அடைந்து அவர் அடிக்கடி வாட்சை பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. அதன் காரணமாகவே இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.” என்றார். 


இந்த உத்தரவானது உடனடியாக அமலுக்கு வருகிறது. உத்தரவின் நகல்கள் குழு லாபிகள், சி.எல்.ஐகள், டி.ஆர்.எம் மற்றும் அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் உடனடியாக செயல்படுத்த அனுப்பப்பட்டுள்ளன. 


யாராவது பிறப்பிக்கப்பட்டுள்ள விதிகளை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.