மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் (தற்போது யூனியன் பிரதேசமாக உள்ளது) ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, ஹரியானா, ஜம்மு காஷ்மீருக்கான தேர்தல் தேதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
தள்ளிப்போகும் மகாராஷ்டிரா தேர்தல்? கடந்த முறை, ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், இந்த முறை மகாராஷ்டிராவுக்கு நடத்தாமல் ஜம்மு காஷ்மீருடன் சேர்த்து ஹரியானாவுடன் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த தலைமை தேர்தல் ஆணையம் ராஜீவ் குமார், "கடந்த முறை, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்கள் ஒன்றாக நடந்தன. அந்த நேரத்தில், ஜம்மு காஷ்மீர் ஒரு காரணியாக இல்லை. ஆனால், இந்த முறை 4 மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளன.
இதற்குப் பிறகு உடனடியாக 5வது மாநிலத்திற்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர், ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்டை தொடர்ந்து டெல்லியில் தேர்தல் தொடங்க உள்ளது. பாதுகாப்பு படைகளின் தேவையைப் பொறுத்து, நாங்கள் 2 தேர்தல்களை ஒன்றாக நடத்த முடிவு செய்துள்ளோம்.
மற்ற காரணி என்னவென்றால், மகாராஷ்டிராவில் பலத்த மழை பெய்திருக்கிறது. அதோடு, பல பண்டிகைகளும் வர உள்ளன" என்றார்.
தேர்தல் தேதியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்: ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலானது 3 கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல, ஹரியானாவில் ஒரே கட்டமாக வரும் அக்டோபர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநில தேர்தல் அறிவிப்பு: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்ட தகவலின்படி, ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதையடுத்து, செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் மூன்றாம் கட்ட தேர்தல் வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவுக்கு ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 4ஆம் தேதி, இரண்டு மாநில தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.