பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


அடுத்த அதிரடிக்கு தயாராகும் மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்:


இந்நிலையில், ஆசிய போட்டிகளில் விளையாட மாட்டோம் என மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் அதிரடியாக அறிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் சோனிபட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தப் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்தால்தான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போம். ஒவ்வொரு நாளும் நாங்கள் மனதளவில் என்ன எதிர்கொள்கிறோம் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது" என்றாார்.


கடந்தாண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி, ஆசிய சாம்பியன்ஷிப் (சீனியர்) போட்டியின் பயற்சி ஆட்டத்திற்கு பிறகு புகைப்பட அமர்வு நடைபெற்றது. அப்போது, தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் ஏழு பேர் புகார் அளித்தனர். 


"மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளருடன் புகைப்படம் எடுக்க வீராங்கனைகள் மேடையில் கூடியிருந்தனர். அப்போது, வீராங்கனையின் பிட்டத்தில் (buttock) அவரின் அனுமதி இன்றி பிரிஜ் பூஷன் கை வைத்தார். இது, மிகவும் அநாகரீகமானது மற்றும் ஆட்சேபனைக்குரியது" என மல்யுத்த வீராங்கனை ஒருவர் புகார் அளித்துள்ளார்.


டெல்லி காவல்துறை, இதுவரை, 200க்கும் மேற்பட்டோரிடன் வாக்குமூலத்தை பெற்றுள்ளது. அந்த வகையில், கடந்த மே 20ஆம் தேதி, சர்வதேச மல்யுத்த நடுவர் ஜக்பீர் சிங்கின் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்களை ஜக்பீர் சிங் பகிர்ந்துள்ளார். கடந்தாண்டு மார்ச் மாதம், லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொடக்கூடாத இடத்தில் மல்யுத்த வீராங்கனையை பிரிஜ் பூஷன் தொட்டு அமுக்கியதாக ஜக்பீர் சிங் தெரிவித்துள்ளார்.


கைது செய்யப்படுவாரா பிரிஜ் பூஷன்?


கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அவர்களுடன் மத்திய அரசின் சார்பில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தை நடத்தினார். 6 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, போராட்டம் ஜூன் 15ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். 


பேச்சுவார்த்தையின்போது, பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பான விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்கு முடிக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி அளித்தார். அதேபோல, மல்யுத்த வீரர்கள் சார்பில் 5 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 


இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு சுதந்திரமான நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும், சம்மேளனத்திற்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என மல்யுத்த வீரர்கள் கோரி கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று கொண்டுள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், மல்யுத்த வீரர்களுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்திருந்தார்.