பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
பணியிடத்தில் ஒரு பணியாளரை அலுவலகப் பணிகளுக்காகக் கண்டிப்பது பிரிவு 504 இன் கீழ் குற்றமாகாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது

பணியிடத்தில் ஒரு பணியாளரை அலுவலகப் பணிகளுக்காகக் கண்டிப்பது பிரிவு 504 இன் கீழ் குற்றமாகாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஊழியர்களின் பணி மற்றும் செயல்திறனைக் கேள்வி கேட்காமல் இருப்பது அல்லது பணியிட தவறான நடத்தையைக் கையாள்வது தவறான முன்னுதாரணமாக அமையும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு தேசிய மனநல நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இயக்குநர் ஒருவர் உதவிப் பேராசிரியரை அவமதித்ததாக ஒருவர் குற்றவியல் வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இயக்குநர் தன்னை உரத்த குரலில் கண்டித்ததாகவும், கொரோனா காலத்திற்கு பிறகு அவரது செயல்கள் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், தனது மருத்துவ நிலையை மோசமாக்கியதாகவும் பேராசிரியர் தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்க விசாரித்த நீதிபதிகள் குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஊகமானது என்று தெரிவித்தனர்.
மேலும், குற்றவியல் குற்றச்சாட்டுகளைத் தக்கவைக்கத் தேவையான சட்ட வரம்பை பூர்த்தி செய்ய மனுதாரர் தரப்பு தவறிவிட்டதாகவும் தெரிவித்தனர்.
தொற்றுநோய்களின் போது பணியிட ஒழுக்கம் மற்றும் தொழில்முறை எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. எனவே இயக்குநரின் நடவடிக்கையை அந்த சூழலில் பார்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
"தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், தனது இளைய ஊழியர்கள் தங்கள் தொழில்முறை கடமைகளை மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்ய வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பாகும்" என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.