FasTag Rules: ஃபாஸ்டேக் சேவையின் புதிய விதிகளை பின்பற்றாவிட்டால், இரட்டிப்பு அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.


ஃபாஸ்டேக் விதிமுறைகள்:


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), FASTag பயனர்களுக்கு இன்று முதல் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இது சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி, நீங்கள் ஒரு சுங்கச்சாவடிக்குள் நுழையும்போது உங்கள் FASTag-ல் போதுமான இருப்பு இல்லை என்றால், அதை ரீசார்ஜ் செய்ய இப்போது உங்களுக்கு 60 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்களது ஃபாஸ்டேக் கணக்கிற்கு, போதுமான தொகையை செலுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படும். அதாவது,  சுங்கச்சாவடியிலிருந்து வெளியேறும்போது நீங்கள் இரு மடங்கு சுங்கக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.




விரைவான சுங்கக் கட்டணங்களை உறுதி செய்வதற்கும், பயனர்கள் தங்கள் FASTag கணக்குகளை எல்லா நேரங்களிலும் போதுமான அளவு ரீசார்ஜ் செய்து வைத்திருப்பதை ஊக்குவிப்பதற்கும் இந்த புதிய விதிகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. 


புதிய FASTag விதிகள்:



  • ஒரு சுங்கச்சாவடிக்குள் நுழையும்போது உங்கள் FASTag கணக்கில் போதுமான இருப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

  • உங்கள் கணக்கில் போதுமான பணம் இல்லை என்றால், கணினி உங்களை கடந்து செல்ல அனுமதிக்கும், ஆனால் உங்கள் FASTag ஐ குறைந்த இருப்புத் தொகையாகக் குறித்து வைத்துக்கொள்ளும்

  • அடுத்த 60 நிமிடங்களுக்குள் உங்கள் கணக்கை ரீசார்ஜ் செய்ய நினைவூட்டும் வகையில், SMS அல்லது FASTag செயலி வழியாக உங்களுக்கு அறிவிப்பு வரும்.

  • குறிப்பிட்ட நேரத்திற்குள் ரீசார்ஜ் செய்யத் தவறினால், நெடுஞ்சாலையை விட்டு வெளியேறும்போது இரண்டு மடங்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது உண்மையான சுங்கக் கட்டணம் ரூ. 100 ஆக இருந்தால், ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் FASTag-ஐ ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், அதற்குப் பதிலாக ரூ. 200 நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்


 புதிய FASTag விதி ஏன் அறிமுகப்படுத்தப்படுகிறது? 


பல ஓட்டுநர்கள் தங்கள் FASTag இருப்பை சரிபார்க்காமல் சுங்கச்சாவடிகளுக்குள் நுழைவதை NHAI கவனித்துள்ளது. இதனால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சிக்கல்களை உருவாக்குகிறது. அநாவசியமாக பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். புதிய விதி நெடுஞ்சாலைகளில் நெரிசல் குறைவாக இருப்பதை உறுதி செய்கிறது. மேலும், நீங்கள் போதுமான இருப்பை பராமரித்தால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படாது.


அபராதங்களை தவிர்ப்பது எப்படி?



  • உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு எப்போதும் உங்கள் FASTag கணக்கின் இருப்புத் தொகை அளவை சரிபார்க்கவும்.

  • உங்கள் FASTag வழங்குநரின் மொபைல் செயலி அல்லது வலைத்தளம் மூலம் இதைச் செய்யலாம்.

  • உங்கள் FASTag கணக்கில் தானியங்கி ரீசார்ஜை இயக்கவும், இதனால் இருப்பு குறைவாக இருக்கும்போது அது தானாகவே நிரப்பப்படும்.

  • குறைந்த இருப்பு பற்றிய எச்சரிக்கைகளைப் பெற, SMS அறிவிப்புகளை இயக்கத்தில் வைத்திருங்கள்.

  • வாகனம் ஓட்டும்போது குறைந்த இருப்பு தொடர்பான எச்சரிக்கையைப் பெற்றால் உடனடியாக ரீசார்ஜ் செய்யுங்கள்.