இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் கொரோனா ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்துகொண்டே தான் வந்தன. தற்போது ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகும் மீண்டும் பெண்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. அந்தவகையில் தற்போது பெண் காவலர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அலிகஞ் பகுதியில் பெண் காவலர் ஒருவர் இரவு நேர பெண்கள் பாதுகாப்பு படையான பிங்க் படையில் பணியாற்றி வந்துள்ளார். அந்த சமயத்தில் பிரபாத் குமார் என்ற நபர் அந்த வழியே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் பெண் காவலர் தகாத வார்த்தையில் திட்டியுள்ளதாக தெரிகிறது. இதை தட்டி கேட்ட அப்பெண் காவலரை பிரபாத் குமார் மீண்டும் மோசமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ஆத்திரம் அடைந்த அவர் அப்பெண் காவலரின் தலையில் இரும்பு கம்பியை எடுத்து அடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்தப் பெண் காவலரின் தலையில் இரத்தம் வழிந்து ஓட தொடங்கியுள்ளது. அங்கு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் பிரபாத் குமாரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் அறிந்த வந்த காவல்துறையினர் பிரபாத் குமாரை தேடி கண்டிபிடித்தனர். அத்துடன் அவரை விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஏடிஎஸ்பி பிராச்சி சிங், “பெண் காவலர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த நபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதை தட்டி கேட்ட பெண் காவலரை அவர் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். அவர் தற்போது நாங்கள் கைது செய்து விசாரணை செய்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையே காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் அப்பெண் காவலர் வசிக்கும் அதே பகுதியில் வசிப்பவர் என்று தெரியவந்துள்ளது. அத்துடன் பிரபாத் குமாரின் தந்தை ஒரு வழக்கறிஞர் என்பதும் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் எதுவும் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க பிங்க் படை ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தப் படையில் உள்ள பெண் காவலர் ஒருவருக்கே பாதுகாப்பு இல்லாமல் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிங்க் படை காவலருக்கே இந்த நிலைமையா என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சுகேஷ் சந்திரசேகர் பணமோசடி வழக்கு.. பாலிவுட் நடிகையிடம் 5 மணி நேரம் விசாரணை!