இந்தியாவில் ஆண்களைவிட பெண்கள் குறைவான வேலைவாய்ப்பை பெறுவதற்கு பாலின பாகுபாடே காரணம் என ஆக்ஸ்பாம் இந்தியா வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு பாலினத்திற்கு இடையே 98 சதவீத வேலைவாய்ப்பு இடைவெளி இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளது.






இந்தியாவில் பெண்களின் கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் ஆண்களுக்கு நிகராக இருந்தாலும், அவர்களை சமூகம் மற்றும் முதலாளிகள்  பாகுபாட்டுடன் நடத்துவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழிலாளர் சந்தையில் பாகுபாடு காட்டப்படுவதன் காரணமாக கிராமப்புறங்களில் பெண்கள் 100 சதவீத வேலைவாய்ப்பு சமத்துவமின்மையை எதிர்கொள்கின்றனர் என ஆக்ஸ்பாம் இந்தியாவின் 'இந்தியப் பாகுபாடு அறிக்கை 2022' தெரிவிக்கிறது. நகர்ப்புறங்களை பொறுத்தவரை 98 சதவீத பெண்கள், வேலைவாய்ப்பில் சமத்துவமின்மையை எதிர்கொள்கின்றனர் என கூறப்பட்டுள்ளது.


சுயதொழில் செய்யும் ஆண்கள், பெண்களை விட 2.5 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்றும் அதில் 83 சதவீதம் அதிகம் ஊதியம் பெறுவதற்கு பாலின அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. கூலி தொழிலை பொறுத்தவரை, பெண்கள் மற்றும் ஆண்களின் வருமானத்திற்கு இடையே 95 விழுக்காடு வருமான இடைவெளி ஏற்படுவதற்கு பாலின பாடுபாடே காரணமாகும்.


"கிராமப்புற சுயதொழில் செய்யும் ஆண்கள் கிராமப்புறங்களில் பெண்கள் சம்பாதிப்பதை விட இரண்டு மடங்கு சம்பாதிக்கிறார்கள். சாதாரண ஆண்  தொழிலாளர்கள் பெண்களை விட மாதத்திற்கு ₹ 3,000 அதிகம் சம்பாதிக்கிறார்கள். இதில் 96 சதவீதம் பாகுபாடு காரணமாக உள்ளது" என்று அறிக்கை கூறுகிறது.


அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட கல்வி ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட புள்ளிவிவர மாதிரியானது இப்போது தொழிலாளர் சந்தையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டை விளக்க உதவுகிறது. பெண்களின் குறைந்த ஊதியத்திற்கு 67 சதவிகிதம் பாகுபாடு காரணம் என்றும் 33 சதவிகிதம் கல்வி மற்றும் பணி அனுபவம் இல்லாததால் ஏற்படுகிறது.


அனைத்து பெண்களுக்கும் சம ஊதியம் மற்றும் வேலைக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைக்கான பயனுள்ள நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்துமாறு ஆக்ஸ்பாம் இந்தியா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஊதியத்தை மேம்படுத்துதல், திறன் மேம்பாடு, வேலை இட ஒதுக்கீடு மற்றும் மகப்பேறுக்குப் பிறகு எளிதாக வேலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி பணிகளில் பெண்களின் பங்கேற்பை இந்திய அரசு ஊக்குவிக்க வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


ஒரு ஆணும் பெண்ணும் சமமான நிலையில் தங்களது பயணத்தை தொழிலாளர் சந்தையில் தொடங்கினாலும், பொருளாதார ரீதியாக பெண் பாகுபாட்டை எதிர்கொள்கிறார். வழக்கமான சம்பளம், சாதாரண மற்றும் சுயதொழில் ஆகியவற்றில் பெண்கள் பின்தங்கியிருக்கிறார் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.