இந்தியாவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக விளங்குவது மும்பை. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த மும்பையில் நாட்டின் பல மாநிலங்களில் உள்ள மக்களும் வசித்து வருகின்றனர். இந்தியாவின் வர்த்தகத்தின் முக்கிய நகரமாகவும் மும்பை விளங்குகிறது. பல கலவரங்களையும், பேரிடர்களையும் சந்தித்த மும்பையில் எப்போதும் பாதுகாப்பு பலமாக இருக்கும்.


இந்த நிலையில், மும்பையில் ஒர்லி போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ் அப் மூலமாக செய்தி ஒன்று நேற்று முன்தினம் இரவு வந்துள்ளது. அந்த எண் மூலமாக அடுத்தடுத்த வந்த தகவல்களில், 2008ம் ஆண்டை நினைவுபடுத்தும் விதமாக மும்பையில் தாக்குதல் நடத்தும் என்றும், இந்த தாக்குதலை 6 பேர் கொண்ட கும்பல் நடத்துவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.




மேலும், அந்த குறுஞ்செய்தியில்  மும்பையில் தாக்குதல் நடத்தியதற்காக தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப், அல்கொய்தா தலைவர் அய்மன் அல் யாஹிரி ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றிருந்தது. இதைக்கண்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மிரட்டல் வந்த எண்ணை போலீசார் ஆய்வு செய்ததில் அந்த எண் பாகிஸ்தானில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


பாகிஸ்தானில் இருந்து விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து மும்பை காவல் ஆணையர் விவேக் பன்சால்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,” மிரட்டல் வந்த எண் பாகிஸ்தானைச் சேர்ந்தது. இந்த மிரட்டலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுதொடர்பாக, குற்றப்பிரிவு போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாட்ஸ் அப்பில் வந்த நம்பரில் இந்தியாவைச் சேர்ந்த சில செல்போன் எண்களும் அனுப்பப்பட்டுள்ளன. அந்த எண்களை தொடர்பு கொள்ள உள்ளோம். மும்பை மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களின் பொறுப்பு. மும்பையில் அனைத்து இடங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.




கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மும்பை அருகே உள்ள கடற்கரையில் ஏகே 47 துப்பாக்கிகளுடன் வெளிநாட்டு படகு கரை ஒதுங்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, பாகிஸ்தானில் இருந்து தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை வந்ததால் மும்பை போலீசார் அனைவரும் பரபரப்பாகினர். இதையடுத்து, மும்பை முழுவதும் பாதுகாப்பை பன்மடங்கு அதிகரிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மும்பையில் அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ள சூழலில், மர்ம படகு ஆயுதங்களுடன் ஒதுங்கியது, பாகிஸ்தானில் இருந்து தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மும்பை மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.