பெங்களூருவில் பேருந்தில் இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
செருப்பால் அடித்துக் கொண்ட பெண்கள்:
பொதுவாக மத்திய மற்றும் ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலத்தில் உள்ள மற்றும் வெளி இடங்களில் இருந்து வரும் மக்களின் வசதிக்காக பல்வேறு வகையான பேருந்து மற்றும் ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. இதில் இடம் பிடிக்க போட்டா போட்டி நடைபெறும் நிலையில் சில நேரங்களில் ஜன்னல் சீட்டு கேட்டு சண்டையும் நடைபெறும். இது சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறும் நிகழ்வுகளும் ஆங்காங்கு நடைபெறும்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜாஜி நகர் அருகே இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. அதாவது அந்த வீடியோவில் கூட்ட நெரிசல் மிகுந்த பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக பேருந்தில் 2 பெண்கள் இடையே தகராறு ஏற்படுகிறது. முதல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் நிலையில் அடுத்த சில நிமிடங்களில் அது கைகலப்பாக மாறி விடுகிறது. உடனடியாக இருவரும் காலில் போட்ட செருப்பை எடுத்து ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
ஜன்னல் ஓர இருக்கை:
சம்பந்தப்பட்ட அந்த பேருந்து பெங்களூரு மாநகரம் மெஜஸ்டிக்கில் இருந்து பீன்யாவிற்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பேருந்தில் பயணித்த சக பயணிகள் தங்கள் செல்போன்களில் இந்த சண்டையை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். உடனடியாக சக பயணிகள் நடத்துனரிடம் தங்களுக்கு இருவரும் இடையூறாக இருப்பதாக கூறி பேருந்தில் இருந்து இறக்கி விடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், “பேருந்தில் முன்பின் சீட்டில் ஜன்னல் ஓரத்தில் இரு பெண்களுக்கும் இடம் கிடைத்துள்ளது. ஆனால் ஜன்னலை திறப்பதில் தான் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது” என தெரிய வந்தது. இணையவாசிகள் பலரும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் மக்கள் சக பயணிகளுக்கு பரஸ்பர மரியாதையும், கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.